சென்னிமலையில் விசைத்தறி உரிமையாளர்கள் அடையாள வேலை நிறுத்தம்; நூல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்தது


சென்னிமலையில் விசைத்தறி உரிமையாளர்கள் அடையாள வேலை நிறுத்தம்; நூல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்தது
x
தினத்தந்தி 8 April 2022 2:27 AM IST (Updated: 8 April 2022 2:27 AM IST)
t-max-icont-min-icon

சென்னிமலையில் நூல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து விசைத்தறி உரிமையாளர்கள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

சென்னிமலை
சென்னிமலையில் நூல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து விசைத்தறி உரிமையாளர்கள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். 
ஆயிரக்கணக்கான       விசைத்தறி கூடங்கள்
சென்னிமலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆயிரக்கணக்கான விசைத்தறி கூடங்கள் இயங்கி வந்தன. இதில் தறி ஓட்டுதல், நூல் போடுதல், பாவு ஓட்டுதல், பாவு பிணைத்தல் என இதன் சார்பு தொழில்களில் பல்லாயிரக்கணக்கான ஆண், பெண் தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர்.
ஆனால் நாளடைவில் மின்கட்டணம் உயர்வு, நூல் விலை உயர்வு, உற்பத்தி செய்த பெட்ஷீட் ரகங்களின் விற்பனை சரிவு காரணமாக விசைத்தறி தொழில் பாதிக்கப்பட்டது. 
நூல் விலை தொடர்ந்து    அதிகரிப்பு
மேலும் பெரும்பாலான தொழிலாளர்கள் திருப்பூர் பகுதியில் செயல்படும் ஆயத்த ஆடை தொழில் நிறுவனங்களுக்கு சென்று விட்டதால் விசைத்தறி தொழில் மிகவும் நசிவடைந்தது. தற்போது சென்னிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 200-க்கும் குறைவான விசைத்தறி கூடங்களே செயல்பட்டு வருகிறது.
கொரோனா காலத்திற்கு பிறகு விசைத்தறி துணிகளின் விற்பனை மிகவும் மந்தமாக உள்ள நிலையில் நூலின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்ததால் விசைத்தறி உரிமையாளர்கள் தொடர்ந்து தொழிலை நடத்த முடியாத அளவுக்கு தள்ளப்பட்டுள்ளனர். 
வேலை நிறுத்தம்
இதனால் தொடர்ந்து நூலின் விலை உயர்ந்து வருவதை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்து இருந்தனர். 
அதன்படி நேற்று சென்னிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விசைத்தறி கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது. இந்த அடையாள வேலை நிறுத்த போராட்டத்துக்கு விசைத்தறி தொழிலாளர்கள் முழு ஆதரவு தெரிவித்திருந்தனர்.

Next Story