தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு
தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு
பயனில்லாத வழிகாட்டி பலகை
பொள்ளாச்சி-திருப்பூர் மெயின் ரோட்டில் தொப்பம்பட்டி அருகே பல்வேறு இடங்களுக்கு செல்லும் வகையில் வழிகாட்டி பெயர் பலகை வைக்கப்பட்டது. ரோடு அகலப்படுத்தும் பணிக்காக அவை அகற்றப்பட்டது. அதில் ஒரு வழிகாட்டி பலகையின் தூண் ஒரு இடத்திலும், பெயர் பலகை மற்றொரு இடத்திலும் இருக்கிறது. இதனால் பயன் இல்லாமல் கிடக்கும் வழிகாட்டி பலகையை வாகன ஓட்டிகளுக்கு பயன்பெறும் வகையில் சாலையோரத்தில் நிறுத்த வைக்க வேண்டும்.
முருகவேல், தொப்மப்பட்டி.
தெருவிளக்குகள் தேவை
கோத்தகிரி அரசு மருத்துவமனையில் பல பகுதிகளில் தெரு விளக்குகள் இல்லை. இதனால் இரவில் அந்தப்பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக இங்கு வரும் பொதுமக்கள் பயத்துடன் செல்லக்கூடிய நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து கூடுதல் தெருவிளக்கு வசதி செய்ய வேண்டும்.
ஜேக்கப், கோத்தகிரி.
பஸ்பாஸ் வேண்டும்
கூடலூரில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் ஊட்டி அரசு கல்லூரி மற்றும் தொழில்பயிற்சி மையத்தில் படித்து வருகிறார்கள். அவர்கள் பஸ்சில் இலவசமாக செல்ல பஸ்பாஸ் வழங்கப்பட்டு உள்ளது. இந்த பஸ்பாஸ் கூடலூரில் இருந்து டி.ஆர்.பஜார் வரை மட்டுமே செல்ல முடியும். அதன் பின்னர் ஊட்டி வரை செல்ல மாணவர்கள் டிக்கெட் எடுத்து செல்லும் நிலை நீடித்து வருகிறது. எனவே கூடலூரில் இருந்து ஊட்டி வரை செல்லும் வகையில் பஸ்பாஸ் வழங்க வேண்டும்.
ஆனந்த், கூடலூர்.
சுத்தம் இல்லாத கழிப்பிடம்
பொள்ளாச்சி புதிய பஸ் நிலையத்தில் இருந்து வால்பாறை, ஆனைமலை உள்பட பல இடங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் இந்த பஸ்நிலையத்தில் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். ஆனால் இங்குள்ள கழிப்பிடத்தை முறையாக சுத்தம் செய்வது இல்லை. இதனால் உள்ளே செல்ல முடியாத அளவுக்கு கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே பயணிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முகேஷ், பாலக்காடு.
வீணாகும் குடிநீர்
கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு பரவலாக காணப்படுகிறது. கோடைகாலம் என்பதால் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் பெரும்பாலான இடங்களில் குடிநீர் குழயை திறந்து விட்டு தண்ணீர் பிடித்து பலர் தங்கள் வாகனங்களை கழுவி வருகிறார்கள். இதனால் குடிநீர் வீணாகி வருகிறது. எனவே இதுபோன்று குடிநீரை வீணாக்குவதை தடுக்க வேண்டும். .
எஸ்.கே.ராஜ், கூடலூர்.
ஆபத்தான குழி
கோவை மாநகராட்சி 35-வது வார்டு இடையர்பாளையம் வடவள்ளி சாலையில் கோபால் தோட்டம் என்ற பகுதி உள்ளது. இந்த சாலையில் குடிநீர் குழாய் அமைக்க தோண்டப்பட்டது. ஆனால் தோண்டப்பட்டு 2 ஆண்டுகள் ஆகியும் குழி மூடப்படவில்லை. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து சாலையில் உள்ள ஆபத்தான குழியை மூட வேண்டும்.
தீபன், இடையர்பாளையம்.
குடிநீர் வரவில்லை
கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரத்தில் உள்ள நேதாஜி நகரில் கடந்த 17 நாட்களாக குடிநீர் வரவில்லை. இதனால் பொதுமக்கள் விலை கொடுத்து குடிநீர் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். அதுபோன்று கடந்த 5 நாட்களாக குப்பைகளும் சுத்தம் செய்யவில்லை. இதனால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே குடிநீர் வினியோகம் செய்வதுடன், குப்பைகளை சுத்தம் செய்ய வேண்டும்.
ராஜசேகரன், நேதாஜிநகர்.
இடியும் நிலையில் சுற்றுச்சுவர்
கோவையை அடுத்த சூலரில் போலீஸ் நிலையம் உள்ளது. இந்த போலீஸ் நிலையத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்டப்பட்டு இருக்கிறது. அதில் ஒருபுறம் உள்ள சுற்றுச்சுவரை ஒட்டி சாக்கடை கால்வாய் செல்கிறது. இங்கு எப்போதும் கழிவுநீர் செல்வதால், சுற்றுச்சுவரில் விரிசல் ஏற்பட்டு எந்த நேரத்திலும் உடைந்து கீழே விழக்கூடிய ஆபத்தான நிலையில் இருக்கிறது. எனவே அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மோகன்ராஜ், சூலூர்.
பஸ்கள் இயக்கப்படுமா?
கோவையை அடுத்த சோமனூரில் இருந்து திருப்பூர் பழைய பஸ் நிலையத்துக்கு 5, 5ஏ, 5 டி ஆகிய பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்களில் தினமும் ஏராளமான பயணிகள் சென்று வருகிறார்கள். ஆனால் இந்த பஸ்களை கருமத்தம்பட்டியில் இருந்து திருப்பூர் பஸ்நிலையம் வரை இயக்கினால் ஏராளமான பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தனபால், குமாரபாளையம்.
Related Tags :
Next Story