ரூ.3 கோடி நில மோசடி வழக்கில் ரியல் எஸ்டேட் தரகர் கைது

ரூ.3 கோடி நில மோசடி வழக்கில் ரியல் எஸ்டேட் தரகர் கைது செய்யப்பட்டார்.
ரூ.3 கோடிக்கு உரிமம்
செங்கல்பட்டு மாவட்டம் தாழம்பூர் ஏகாட்டு கிராமம், பெரியார் தெருவை சேர்ந்தவர் விநாயகம் (வயது 42). ரியல் எஸ்டேட் தரகர். கேளம்பாக்கம் அருகே உள்ள படூர் பகுதியில் வசித்து வந்தவர் கோகுலகிருஷ்ணன். இருவரும் நண்பர்கள்.
இதனால், கோகுலகிருஷ்ணன் தனக்கு சொந்தமான 16 சென்ட் நிலத்தை ரூ.3 கோடிக்கு விநாயகம் பெயருக்கு உரிமம் கொடுத்துள்ளார். உரிமம் எழுதி கொடுத்த ஒரு வாரத்திலேயே கோகுலகிருஷ்ணன் எதிர்பாராத வகையில் உயிரிழந்தார். கோகுலகிருஷ்ணன் இறந்ததையடுத்து, விநாயகத்துக்கு உரிமம் கொடுத்த நிலத்தை கோகுலகிருஷ்ணனின் மகளான ஜெயஸ்ரீ (30) என்பவருக்கு உரிமம் கொடுத்து விநாயகத்துக்கு உரிமம் வழங்கப்பட்டது.
கைது
விநாயகம் அந்த நிலத்தை வேறு ஒரு நபருக்கு விற்று விட்டு ரூ. 3 கோடியை ஜெயஸ்ரீக்கு கொடுக்காமல் மோசடி செய்து வந்ததாக தெரிகிறது.
பல முறை பணத்தை கேட்டபோதும் விநாயகம் ஜெயஸ்ரீக்கு கொடுக்காமல் ஏமாற்றி வந்தார். இது குறித்து ஜெயஸ்ரீ செங்கல்பட்டு மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் வழக்குப்பதிவு செய்து விநாயகத்தை கைது செய்து சிறையில் அடைத்தார்.
மற்றொரு சம்பவம்
இதேபோல் உத்திரமேருர் தாலுக்கா சீத்தஞ்சேரி, கரும்பாக்கம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் கோபால்(37). இவர் படப்பை அடுத்த வஞ்சுவாஞ்சேரி கிராமத்தில் இருந்த மேய்க்கால் புறம்போக்கு இடத்திற்கு போலி பத்திரத்தை உருவாக்கி கடந்த 2017-ம் ஆண்டு ரூ.19 லட்சத்துக்கு மேடவாக்கம் பல்லவன்நகர் பகுதியை சேர்ந்த மூர்த்தி(46), என்பவருக்கு விற்றுள்ளார். இந்த மோசடி மூர்த்திக்கு தெரியவந்த நிலையில், இதுகுறித்து மணிமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு கோபாலை கைது செய்தனர்.
Related Tags :
Next Story






