‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 10 April 2022 9:56 PM IST (Updated: 10 April 2022 9:56 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

மின்வாரியத்தின் துரித நடவடிக்கை

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பேரூராட்சி ஆறுமுகப் பேட்டை ரங்கப்பிள்ளை தெருவில் உள்ள மின்கம்பத்தை சுற்றி மரக்கிளைகள் படர்ந்து இருப்பது தொடர்பான செய்தி ‘தினத்தந்தி’ புகார்பெட்டியில் வெளியானது. இதையடுத்து விரைந்து நடவடிக்கை எடுத்த மின்வாரிய ஊழியர்கள் மரக்கிளைகளை அகற்றி மின்கம்பத்துக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க வழிவகை செய்துள்ளனர். இதனால் மகிழ்ந்த அப்பகுதி சாலைவாசிகள் உடனடி நடவடிக்கை மேற்கொண்ட மின்வாரியத்துக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் தங்களது பாராட்டை தெரிவித்தனர்.



தேங்கிய கழிவுநீர் அகற்றப்பட்டது

சென்னை திருவொற்றியூர் கலைஞர் நகர் 8-வது தெருவில் கழிவுநீர் தேங்கியிருப்பது தொடர்பாக ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் விதமாக, மாநகராட்சி ஊழியர்களால் கழிவுநீர் அகற்றப்பட்டுள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த தெருமக்கள், துரிதமாக செயல்பட்ட மாநகராட்சிக்கும், இதற்கு காரணமாக இருந்த ‘தினத்தந்தி’க்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.


பயனற்ற பெயர்ப்பலகை ஏன்?

சென்னையை அடுத்த ஆவடி குளக்கரை தெருவில் உள்ள பெயர்பலகையில் சட்டங்கள் மட்டுமே இருக்கின்றது. தெருவின் பெயரே இல்லாமல் வெறும் சட்டங்களை வைத்துக்கொண்டு என்ன பயன்? இந்த நிலை நீண்ட நாட்களாக தொடர்வதால், முகவரி தேடி வருவோர் அங்குமிங்குமாக அலைய வேண்டிய நிலையுள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் தெருவில் பெயர்பலகை அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- செல்லமுத்து, சமூக ஆர்வலர்.



ரெயில் நிலையத்தில் எலிகளின் அட்டகாசம்

சென்னை அடுத்த ஆவடி ரெயில் நிலையத்தின் நடைமேடையில், அங்குமிங்குமாக எலிகள் கூட்டமாக சேர்ந்து சுற்றி திரிகின்றன. ரெயில் ஏற முதியோர், குழந்தைகள் உள்பட பெரும்பாலோனோர் வந்து செல்லும் பொது இடத்தில், எலிகள் நடமாட்டம் அதிகம் இருப்பது வேதனையளிக்கிறது. எனவே ரெயில்வே நிர்வாகம் இந்த பிரச்சினையை கவனித்து தீர்வுகாண வேண்டும்.

- ஈஸ்வர் ராவ், ரெயில் பயணி.

விபரீதமான வடிகால்வாய்

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி நெடுஞ்சாலை மதுரவாயல் சந்தை பஸ் நிறுத்தம் அருகில், சாலையை ஒட்டியுள்ள மழைநீர் வடிகால்வாயின் மூடியானது உடைந்த நிலையில் இருக்கிறது. இதனால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கும், இந்தப்பகுதியில் நடந்து செல்லும் பாதசாரிகளுக்கும் ஆபத்தை விளைவிக்கும் நிலையில் இந்த வடிகால்வாய் உள்ளது. சாலையில் ஒதுங்கும் வாகனங்களும் உடைந்த வடிகால்வாயில் சிக்கி நிற்கும் காட்சியும் அரங்கேறியுள்ளது. அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு விரைந்து வடிகால்வாயை சரி செய்வார்களா?

- சேகர், சாலைவாசி.



ஆபத்தான பள்ளம் மூடப்படுமா?

சென்னை ஆண்டாள் நகர் விரிவாக்கம் பகுதியில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து எப்போது வேண்டுமென்றாலும் கீழே விழுந்து விடும் நிலையில் இருப்பதால், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் நடவடிக்கையால் புதிய மின் கம்பம் அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. இந்நிலையில், பள்ளம் தோண்டப்பட்டு வெகு நாட்களாகியும் புதிய மின்கம்பம் அமைக்கப்படவில்லை. ஆபத்தாக காட்சி தரும் பள்ளத்தை மூடவும், புதிய மின்கம்பத்தை அமைக்கவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சீனிவாசன், ஆண்டாள் நகர் விரிவாக்கம்.

குடிநீரில் கழிவுநீர்

திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் கார்த்திகேயன் நகர் பகுதியில் குடிநீருடன் சேர்ந்து கழிவுநீரும் கலந்து வருகிறது. இதனால், குடிநீரை குடிக்கவே முடியாத நிலை ஏற்படுகிறது. துர்நாற்றமும் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த பிரச்சனையை சரி செய்ய வேண்டும்.

- நாகேந்திரன், மதுரவாயல்.


சாய்ந்த நிலையில் மின்கம்பம்

திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு கணபதி நகர் பகுதியில் உள்ள மின்கம்பம் சாய்ந்த நிலையில் ஆபத்தாக காட்சி தருகிறது. மேலும், மின்கம்பத்தில் சில பகுதிகள் சேதமடைந்து காணப்படுவதால், மின் வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து மின்கம்பத்தை சரி செய்ய வேண்டும்.

- தெருமக்கள், கணபதி நகர்.



பழுதடைந்த கண்காணிப்பு கேமரா

சென்னை வேளச்சேரி ஒராண்டியம்மன் கோவில் தெருவில் உள்ள கண்காணிப்பு கேமரா பழுதடைந்து காணப்படுகிறது. கடந்த ஒரு வருடமாக இதை யாரும் சரி செய்ய முன்வரவில்லை. பழுதடைந்த கண்காணிப்பு கேமராவை சரி செய்ய சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

- செல்வகுமார், வேளச்சேரி.

குப்பைகள் அகற்றப்படுமா?

சென்னை செனாய் நகர் சிமெட்ரி சாலை ஓரத்தில் குப்பைகள் கொட்டப்படுவதால் பொதுமக்களும், வாகனஓட்டிகளும் சிரமப்படுகிறார்கள். மேலும், இந்த குப்பைகள் அகற்றப்படாமல் சாலையிலேயே தேங்கி வருவதால், சுகாதார சீர்கேட்டுக்கு வழிவகுக்கிறது. எனவே குப்பைகள் அகற்றி, மேலும் கொட்டப்படுவதை தடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- தீபக் பீட்டர், செனாய் நகர்.






Next Story