மணிசாமியார் கொலை வழக்கில் மர்மம் விலகுமா...?


மணிசாமியார் கொலை வழக்கில் மர்மம் விலகுமா...?
x
தினத்தந்தி 10 April 2022 11:07 PM IST (Updated: 10 April 2022 11:08 PM IST)
t-max-icont-min-icon

7 ஆண்டுகளுக்கு பிறகு மணி சாமியார் கொலை வழக்கில் துப்புதுலக்க போலீசார் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

கச்சிதமான காவி உடையுடன்...மயக்கும் மந்திரப்புன்னகையுடன், கழுத்தில் பள, பளக்கும் 25 பவுன் பொன்நகையுடன், தன்னை தேடி வருகின்ற பக்த கோடிகளுக்கு ஆசி வழங்கி, தனக்கென தனிபாணியில் நடைபோட்டவர்தான் 45 வயதான மணி சாமியார். பக்தர்களை வசியம் செய்யும் அவரது வார்த்தைகள் பலருக்கு பலித்தது. 

இதனால் அவரை தேடி வருவோர் எண்ணிக்கை நாளடைவில் அதிகரித்தது. அவரதுஅருள் வாக்கை கேட்க தினசரி வாசலில் காத்து கிடந்தவர்கள் பலர். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில்  வெளிமாவட்டங்களில் இருந்தும் கூட்டம், கூட்டமாக வந்து அவரிடம் அருள் வாக்கு கேட்டனர். இதனால் அந்த சாமியார் பிரபலம் ஆனார். சாமியாருக்கும் சன்மானங்கள் குவிந்தன.

ரத்த வெள்ளத்தில் பிணம்

இவர்.... கோவை சிங்காநல்லூர் பஸ்நிலையம் பின்புறம் தனபால் லே-அவுட்டில் ஒரு பங்களா வீட்டில் தனியாகவே வசித்து வந்தார்.  திருமணம் ஆகாத கன்னி சாமியாராக வலம் வந்தார்.

இந்தநிலையில் கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் 12-ந்தேதி காலை 7 மணியளவில் குறி கேட்பதற்காக நிறையபேர் அவரது வீட்டு வாசலில் காத்திருந்தனர். அப்போது மாரியம்மன் கோவிலுக்கு பூ போடும் தொழிலாளி அங்கு வந்தார். அவர் வந்தபோது சாமியார் வீட்டின் வெளிப்புற கதவு திறந்து கிடந்தது. 

ஆனால் வீட்டுக்கதவு சாவியால் உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவர் உள்ளே ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தார். அங்கு சாமியார் மணி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதனை சற்றும் எதிர்பார்க்காத அவர் அதிர்ச்சி அடைந்தார். 

அருள் மணக்கும் கோலத்தில் பார்க்கும் சாமியார் இப்படி உயிர் இழந்த பிணக்கோலமாக மாறி விட்டாரே என்று அவர் கூச்சல்போட தொடங்கினார்.அவரது சத்தம் கேட்டு வெளியே குறி கேட்க நின்றிருந்த பக்தர்களும் ஓடிவந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். 

தடயங்களுக்காக...

இந்த தகவல்  சிங்காநல்லூர் போலீசுக்கு தெரியவரவே, போலீசார் அங்கு விரைந்து சென்று  பார்த்தனர். அப்போது சாமியார் கழுத்து அறுபட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவரது கழுத்தில் கிடந்த 25 பவுன் நகை திருட்டுபோய் இருந்தது. இதனால் அவரை நகைக்காக யாரோ தீர்த்து கட்டியது தெரியவந்தது. அவரது வீட்டில் இருந்த  ஒரு டி.வி.யும் திருட்டுப்போய் இருந்தது. மற்ற பொருட்கள் எதுவும் திருட்டுபோகவில்லை. 

இதனால் நகைக்காவே இந்த கொலை நடந்துள்ளது என்று வழக்குப்பதிவு செய்தனர். குறுகிய காலத்தில் பெருகிய புகழுடன்வலம் வந்த சாமியார் மணிக்கு கோடிக்கணக்கில் சொத்துக்களும் இருந்தன. இதனால் அதற்கு ஆசைப்பட்டு கொலையாளிகள் அவரை கொன்றார்களா? 

அல்லது நகைக்கு ஆசைபட்டு கொன்றார்களா? பெண் விவகாரமா?என்ற மர்மமும் நீடித்தது. இத்தகைய கேள்விகளுடன்,  அவர்கள் தனக்குரிய கழுகு  பார்வையுடன் தனிப்படை போலீசார் தடயங்களுக்காக பல்வேறு தீவிர முயற்சிகளை மேற்கொண்டனர்.

பொதுவாக ஒரு கொலை நடைபெற்றால், கொலை நடந்த இடத்தில் ஏதாவது ஒரு தடயத்தை குற்றவாளி விட்டுச்செல்வான். கிடைக்கின்ற அந்த சிறு தடயத்தை துருப்புச்சீட்டாக வைத்து பல கொலைகளில் துப்புத்துலங்கி உள்ளது.

 குற்றம் நடைபெற்ற இடத்தில் தடயத்தை அறிய தனிப்படை தவறினால் அந்த குற்றத்தில் தொடர்புடைய குற்றவாளி அகப்படுவதும் தாமதம் ஆகிவிடும். அந்த வகையில் இந்த கொலையில் சிக்கிய சில தடயங்கள் இருந்தாலும், அது முக்கிய தடயங்களாக கொலையாளிகளை கவ்வி பிடிக்க கூடியதாக இல்லை.
 
200 பேரிடம் விசாரணை

கோவையில் நடந்த கொலை சம்பவங்களில் துப்பு துலக்கும் ஒவ்வொரு போலீஸ் இன்ஸ்பெக்டரும் துப்புத்துலக்கும் திறனில் அதி நுட்பத்துடன் இருப்பதுண்டு. இதன் அடிப்படையில் கோவையில் நடைபெற்ற பல கொலை வழக்குகளில் சிறிய தடயங்கள்தான் முக்கிய குற்றவாளி சிக்க காரணமாக அமைந்துள்ளது.

ஆனால் கோவையில் பரபரப்பை ஏற்படுத்திய சாமியார் கொலை வழக்கில் 7 ஆண்டுகள் ஆகியும் இன்னும் துப்புத்துலங்கவில்லை.
இந்த கொலை நடைபெற்றபோது கோவை மாநகர போலீஸ் கமிஷனராக அமல்ராஜ் இருந்தார். 

அப்போது துணை கமிஷனராக பதவி வகித்த நிஷா பார்த்திபன் மேற்பார்வையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அந்த வீட்டுக்கு வந்தவர்கள், சாமியாரின் உறவினர்கள் 200-க்கும் மேலானவர்களிடம் பல மாதங்களாக விசாரணை நடத்தப்பட்டும் துப்புதுலங்கவில்லை என்பதும் வழக்கில் பின்னடைவான விஷயம். 

7 ஆண்டுகள் ஆகியும் இந்த வழக்கில் துப்புத்துலங்காததால் போலீசார் தற்போது இந்த கொலை வழக்கை துப்புத்துலங்காத வழக்கு என்று கிடப்பில் போட்டு விட்டனரா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

துப்புதுலக்க தீவிரம்

தற்போது போலீஸ் கமிஷனராக பதவி வகித்து வரும் பிரதீப்குமாரிடம், இந்த கொலை வழக்கில் துப்புதுலக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை குறித்து கேட்டபோது அவர் கூறியதாவது:-

சாமியார் கொலை வழக்கில் துப்புத்துலக்க மீண்டும் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. எந்தந்தெந்த வகைகளில் முன்பு விசாரணை நடத்தப்பட்டது, விசாரணையில் விடுபட்ட நபர்கள் குறித்து தகவல் அறிந்து மீண்டும் விசாரிக்கவும் உத்தரவிடப்படும். 

இதுபோன்று கோவையில் துப்புத்துலங்காத வழக்குகள் எவை? எவை உள்ளன? என்ற பட்டியல் சேகரிக்கப்படுவதுடன், நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரிக்கும்போதே இதுபோன்ற பழைய வழக்குகளிலும் கவனம் செலுத்தி குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தந்த பகுதி போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு உத்தரவிடப்படும் என்று தெரிவித்தார்.

 மணி சாமியார் கொலை வழக்கில் மர்மம் விலகுமா? 7 ஆண்டுகளுக்கு பிறகு மறுபடியும், கிடப்பில் கிடந்த கொலை வழக்கின் பைலை தூசி தட்டி எடுத்து  துப்புதுலக்க களத்தில் தீவிரம் காட்டும் தனிப்படை போலீசாரின் தீவிரம் கொலையாளிகளை கண்டுபிடிக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Next Story