ஆழியாறு அணையில் மீண்டும் படகுசவாரி தொடங்குமா சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு


ஆழியாறு அணையில் மீண்டும் படகுசவாரி தொடங்குமா சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 10 April 2022 11:59 PM IST (Updated: 10 April 2022 11:59 PM IST)
t-max-icont-min-icon

ஆழியாறு அணையில் மீண்டும் படகு சவாரி தொடங்குமா? என சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

பொள்ளாச்சி

ஆழியாறு அணையில் மீண்டும் படகு சவாரி தொடங்குமா? என சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

ஆழியாறு அணை

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாரில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பூங்கா, அணை உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள ஆழியார் பூங்காவின் அழகை ரசிக்கவும், கடல்போல் விரிந்து பரந்து கிடக்கும் அணை பார்க்கவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கிறார்கள். 

குறிப்பாக, சனி, ஞாயிற்றுகிழமைகள் மற்றும் பள்ளி விடுமுறை நாட்களில் இங்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவது உண்டு. இந்த அணையில் படகு சவாரி நடந்து வந்தது. 

படகு சவாரி

இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு  அமல்படுத்தப்பட்டதால், அந்த நேரத்தில் படகு சவாரி நிறுத்தப் பட்டது. ஆனால் இதுவரை இந்த அணையில் படகு சவாரி மட்டும் தொடங்கப்படவில்லை. 

இதனால் அணைப்பகுதியில் காலியாக கிடக்கும் படகை சுற்றுலா பயணிகள் ஏக்கத்துடன் பார்த்து செல்லும் நிலை நீடித்து உள்ளது. அத்துடன் இனியாவது இங்கு படகு சவாரி தொடங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் சுற்றுலா பயணிகளிடையே ஏற்பட்டு உள்ளது. 

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:- 

ஏமாற்றத்துடன் திரும்புகிறார்கள்

ஆழியாறு அணையில் படகு சவாரிக்கு 10 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ரூ.30-ம், 10 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரூ.40-ம் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. 

இதன் மூலம் கோட்டூர் பேரூராட்சி வருமானம் கிடைத்தது. கொரோனா காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்ட படகு சவாரி இன்னும் தொடங்கப்படவில்லை. 

தற்போது அணைக்கு தினமும ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாகவே இருக்கிறது. ஆனால் படகு சவாரி நிறுத்தப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன்  திரும்பிச்செல்லும் நிலை நீடித்து வருகிறது. 

தொடங்க வேண்டும்

குறிப்பாக அணையில் படகு சவாரி செய்வதற்காகவே சில சுற்றுலா பயணிகள் இங்கு வருவது உண்டு. எனவே அவர்களும் ஏமாந்து செல்லும் நிலை நீடித்து வருகிறது. 

எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மீண்டும் இந்த அணையில் படகு சவாரியை தொடங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story