சேலம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 114 வீடுகளை விற்பனை செய்ய முடிவு
சேலம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 114 வீடுகளை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
சேலம்:-
சேலம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 114 வீடுகளை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஆய்வு
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி நேற்று சேலம் அய்யந்திருமாளிகையில் உள்ள அரசு அலுவலர் வாடகை குடியிருப்பு மற்றும் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.
பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சேலம் அய்யப்பெருமாம்பட்டியில் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் 114 வீடுகள் கட்டப்பட்டு பயன்படுத்தும் அளவில் உள்ளது. இந்த குடியிருப்புகளை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். இருப்பினும் இந்த 114 வீடுகளையும் விற்பனை செய்ய முடிவு செய்து உள்ளோம். அதற்கு அருகில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை என்று அங்கு வசிப்பவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அங்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படும்.
மேலும் அய்யந்திருமாளிகை பகுதியில் 658 வீடுகள், கலெக்டர் குடியிருப்பு பகுதியில் உள்ள 96 வீடுகள் தற்போது பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதை பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டம் வகுத்து வருகிறோம். சேலம் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள பழைய குடியிருப்புகள் இடிக்கப்பட்டு அங்கு புதிய கட்டிடம் கட்ட இருக்கிறோம்.
இடிக்க வேண்டிய நிலை
அரசு குடியிருப்புகளில் வாடகை பாக்கிகளை வசூலிக்க ஒரு கமிட்டி அமைக்கப்படும். வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளில் வாடகையை உயர்த்தியது கொள்கை முடிவு. இருப்பினும் வாடகை குறைப்பது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் இருந்தால் அது குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகம் முழுவதும் 195 இடங்களில் குடியிருப்புகள் உள்ளன. 60 குடியிருப்புகள் இடிக்க வேண்டிய நிலையில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வில் கலெக்டர் கார்மேகம், மேயர் ராமச்சந்திரன், ஆணையாளர் கிறிஸ்துராஜ், பார்த்திபன் எம்.பி., வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர்கள் டி.எம்.செல்வகணபதி (மேற்கு), எஸ்.ஆர்.சிவலிங்கம் (கிழக்கு), துணை மேயர் சாரதாதேவி, உதவி கலெக்டர்கள் விஷ்ணுவர்த்தினி, வேடியப்பன், வீட்டு வசதி வாரிய கண்காணிப்பு பொறியாளர் சாந்தி, செயற்பொறியாளர் அன்பழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story