சென்னையில் போலீஸ் துணை சூப்பிரண்டு மீது தாக்குதல்- வாலிபர் கைது
சென்னையில் நடு ரோட்டில் போதையில் ரகளை செய்து, துணை போலீஸ் சூப்பிரண்டை தாக்கிய ஆசாமி கைது செய்யப்பட்டார்.
அருளரசு ஜஸ்டின்
சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் உளவுப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியில் இருப்பவர் அருளரசு ஜஸ்டின். இவர் நேற்று முன்தினம் இரவு மயிலாப்பூர் பகுதியில் தனது ஜீப்பில் சென்று கொண்டிருந்தார். ஏட்டு குமார் என்பவர் ஜீப்பை ஓட்டினார். அங்குள்ள சாலையில் ஜீப்பை நிறுத்திவிட்டு, ஏட்டு குமார் தண்ணீர் பாட்டில் வாங்கி வர அருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளார். துணை சூப்பிரண்டு அருளரசு ஜீப்பில் உட்கார்ந்திருந்தார்.
அப்போது அங்கு ஸ்கூட்டரில் வந்த போதை ஆசாமி ஒருவர், ஜீப்பை நடு ரோட்டில் நிறுத்துவதா? என்று தகராறு செய்தார். ஜீப் ஓரமாகத்தானே நிற்கிறது என்று கூறியபடி டிரைவரான ஏட்டு குமார் ஓடிவந்து ஜீப்பை எடுக்க முற்படுவதற்குள் தகாத வார்த்தையால் போதை நபர் திட்டி இருக்கிறார். அதையொட்டி போதை ஆசாமிக்கும், ஏட்டு குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
தாக்குதல்...
ஜீப்பில் உட்கார்ந்திருந்த துணை சூப்பிரண்டு அருளரசு கீழே இறங்கி வந்து, போதை ஆசாமியை சமாதானப்படுத்தி அனுப்ப முயற்சித்தார். ஆனால் போதை ஆசாமி அருளரசுவையும் தகாத வார்த்தையால் திட்டி தகராறு செய்துள்ளார்.
அந்த இடத்தைவிட்டு போக மறுத்து தொடர்ந்து வாக்குவாதம் செய்த போதை ஆசாமி, சற்றும் எதிர்பாராமல், துணை சூப்பிரண்டு அருளரசுவை தாக்கி உள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக அருளரசு மயிலாப்பூர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் 5 சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் துணை போலீஸ் சூப்பிரண்டை தாக்கிய போதை ஆசாமியின் பெயர் பிரின்ஸ் பேட்ரிக் (வயது 42) என்பதும், அவர் ராஜாஅண்ணாமலை புரத்தில் வசிப்பவர் என்றும் தெரியவந்தது. முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்புக்கு ஆட்களை அனுப்பும் நிறுவனத்தில் பணி செய்து வந்தார். ஏற்கனவே அவர் மீது அடி-தடி வழக்கு உள்ளதாக தெரிகிறது.
அதிரடி கைது
போதை படுத்திய பாட்டில் துணை சூப்பிரண்டை தாக்கி ரகளையில் ஈடுபட்ட அவரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்து விட்டதாக மயிலாப்பூர் போலீசார் தெரிவித்தனர்.
இதுபோல போதையில் ரகளை செய்து தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் சென்னையில் அடிக்கடி நடக்கிறது. கே.கே.நகரில் கூட இதுபோல போதை நபர் சாலையில் தகராறு செய்து பஸ் கண்ணாடியை உடைத்த சம்பவம் 2 நாட்களுக்கு முன்பு நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story