சிங்காநல்லூர் அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது மூதாட்டி படுகாயம்


சிங்காநல்லூர் அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது மூதாட்டி படுகாயம்
x
தினத்தந்தி 14 April 2022 11:28 PM IST (Updated: 14 April 2022 11:28 PM IST)
t-max-icont-min-icon

கோவை சிங்காநல்லூர் அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் மூதாட்டி படுகாயம் அடைந்தார்.

சிங்காநல்லூர்

கோவை சிங்காநல்லூர் அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் மூதாட்டி படுகாயம் அடைந்தார். 

பழுதடைந்த குடியிருப்பு

கோவை சிங்காநல்லூரில் வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகள் கட்டப்பட்டு பல ஆண்டுகளை கடந்து விட்டது. இதன்காரணமாக இந்த குடியிருப்பில் உள்ள வீடுகள் சேதமடைந்து காணப்படுகின்றன. 

எனவே இந்த குடியிருப்புகளை இடித்து விட்டு புதிய அடுக்குமாடி வீடுகள் கட்ட வேண்டும் என்று குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுதொடர்பாக வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் மற்றும் குடியிருப்புகளில் வசிப்பவர்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 

மேற்கூரை இடிந்தது

இந்த அடுக்குமாடி குடியிருப்பில் தரைத்தளத்தில் வசித்து வருபவர் சுப்புலட்சுமி (வயது 63). இவர்  வீட்டின் மேற்கூரையில் உள்ள தண்ணீர் தொட்டியில் தண்ணீர் எவ்வளவு இருக்கிறது என்பதை பார்க்க மாடிப்படிகள் ஏறி மொட்டை மாடிக்கு சென்றார்.

பின்னர் அங்குள்ள பிளாஸ்டிக் தொட்டியை திறந்து பார்த்தார். அப்போது திடீரென்று மேற்கூரை இடிந்து விழுந்தது. இதனால் சுப்புலட்சுமி அடுக்குமாடி குடியிருப்பு அருகே போடப்பட்டிருந்த சிமெண்ட் கொட்டகை மீது விழுந்தார். 

மூதாட்டி படுகாயம்

இதில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு பொதுமக்கள் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேற்கூரை விழுந்ததில் அந்த சிமெண்டு கொட்டகையும், அதில் இருந்த பொருட்களும் சேதமடைந்தன. 

அதுபோன்று குடியிருப்பின் மேல் பகுதியில் யாரும் இல்லாததால் எவ்வித சேதமும் ஏற்படவில்லை. இதுகுறித்து குடியிருப்புவாசிகள் கூறியதாவது:-

சீரமைக்க வேண்டும்

சிங்காநல்லூர் அடுக்குமாடி குடியிருப்புகளை இடித்து விட்டு புதிய குடியிருப்புகள் கட்டித்தர வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். மேலும் புதிய குடியிருப்புகள் கட்டும்வரை தற்போது உள்ள வீடுகளை தற்காலிகமாக சீரமைக்க வேண்டும். 

அடுத்த மாதம் இறுதியில் பருவமழைக்காலம் தொடங்க வாய்ப்பு உள்ளது. எனவே பெரிய அளவில் சேதங்கள் ஏற்படும் முன் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

1 More update

Next Story