வேறுவாலிபருடன் மனைவிக்கு கள்ளத்தொடர்பு தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை

வேறு வாலிபருடன் காதல் மனைவி கள்ளத்தொடர்பு வைத்ததால் விரக்தி அடைந்த தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோவை
வேறு வாலிபருடன் காதல் மனைவி கள்ளத்தொடர்பு வைத்ததால் விரக்தி அடைந்த தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
காதல் திருமணம்
கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்தவர் பிரசாந்த் குமார் (வயது 32). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவர் கடந்த ஆண்டு தெற்கு உக்கடத்தை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
கணவன், மனைவியும் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள காமராஜபுரம் 5-வது தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். அப்போது அந்த வீட்டின் உரிமையாளரின் மருமகனுக்கும், பிரசாந்த் குமாரின் மனைவிக்கும் இடையே கள்ள தொடர்பு ஏற்பட்டது.
வீட்டை காலி செய்தார்
இதை அறிந்த பிரசாந்த்குமார் தனது மனைவியை கண்டித்தார். ஆனாலும் அவர் தனது கணவர் பேச்சை கேட்காமல் கள்ளக்காதலை தொடர்ந்து வந்ததாக தெரிகிறது. தனது காதல் மனைவியின் தவறான நடத்தையால் வேதனையடைந்த பிரசாந்த்குமார் இது குறித்து தனது மாமனாரிடம் தெரிவித்து உள்ளார்.
உடனே அவர் ஆர்.எஸ்.புரத்தில் குடியிருந்து வரும் வாடகை வீட்டை காலி செய்து விட்டு தனது வீட்டிற்கு வருமாறு கூறினார். இதையடுத்து அவர் அங்குள்ள வீட்டை காலி செய்துவிட்டு தெற்கு உக்கடம் பகுதியில் உள்ள தனது மாமனார் வீட்டின் மேல் மாடியில் மனைவியுடன் குடியிருந்து வந்தார்.
தூக்குப்போட்டு தற்கொலை
வாடகை வீட்டை காலி செய்ததில் உடன்பாடு இல்லாத அந்த பெண், தனது காதல் கணவரிடம் கடந்த ஒரு வாரமாக சண்டையிட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் பிரசாந்த் குமார் கடும் மனவேதனை அடைந்தார். இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்துதகவல் அறிந்த பெரியக்கடை வீதி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிரசாந்த்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மனைவியின் கள்ளத்தொடர்பால் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story






