தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 18 April 2022 10:44 PM IST (Updated: 18 April 2022 10:49 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-

தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:- 

கூடுதல் பஸ்கள் வேண்டும்

பொள்ளாச்சியில் இருந்து 20-வது கி.மீ. தூரத்தில் ஆழியாறு அணை, பூங்கா, குரங்கு அருவி என சுற்றுலா தலங்கள் உள்ளன. இவைகளை கண்டுகளிக்க பல்வேறு இடங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். பொள்ளாச்சி வந்துதான் இங்கு செல்ல வேண்டும். ஆனால் பொள்ளாச்சியில் இருந்து ஆழியாறுக்கு செல்ல போதிய பஸ்வசதி இல்லை. இதனால் சுற்றுலா பயணிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பொள்ளாச்சியில் இருந்து ஆழியாறுக்கு போதிய பஸ்வசதி செய்து கொடுக்க வேண்டும்.

மாலதி, பொள்ளாச்சி.


தண்ணீர் வசதி இல்லாத கழிப்பிடம்

சூலூர் அருகே உள்ள காடாம்பாடி குமாரபாளையத்தில் ஏராளமான பொதுமக்கள் குடியிருந்து வருகிறார்கள். இந்த பகுதியை சேர்ந்தவர்கள் வசதிக்காக ெநாய்யல் ஆற்றின் அருகே பொதுக்கழிப்பிடம் கட்டப்பட்டது. ஆனால் அங்கு தண்ணீர் வசதி செய்து கொடுக்கவில்லை. இதனால் கழிப்பிடம் இருந்தும் அதை பயன்படுத்த முடியாத நிலைக்கு இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தள்ளப்பட்டு உள்ளனர். இதன் காரணமாக இந்த பகுதியை சே்ாந்த பொதுமக்கள் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுத்து இந்த கழிப்பிடத்துக்கு தண்ணீர் வசதி செய்து கொடுக்க வேண்டும்.

  குமார், குமாரபாளையம்.

போக்குவரத்து நெரிசல்

  கோவையை அடுத்த பாப்பம்பட்டி பிரிவு அருகே சூலூர் செல்லும் சாலையில் ரோட்டை ஆக்கிரமித்து கனரக வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் அடிக்கடி விபத்துகளும் நடந்து வருகிறது. இது தொடர்பாக புகார் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே போலீசார் தக்க நடவடிக்கை எடுத்து கனரக வாகனங்களை போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத இடங்களில் நிறுத்த வழிவகை செய்ய வேண்டும்.

மணிகண்டன், சூலூர்.

பாம்புகள் நடமாட்டம்

  கோவை மாநகராட்சி 55-வது வார்டுக்கு உட்பட்ட எஸ்.ஐ.எச்.எஸ்.காலனியில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்துக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த பகுதி புதர்மண்டி கிடக்கிறது. இதை சுற்றிலும் ஏராளமான வீடுகள் உள்ளன. புதர் சூழ்ந்து இருக்கும் அங்கு விஷப்பாம்புகளின் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. இதனால் இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அச்சத்துடன் வசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுத்து புதர்களை அகற்ற வேண்டும்.

  குணசேகரன், கோவை.

சேறும் சகதியுமான சாலை

  கோவை குனியமுத்தூர் ஜெ.ஜெ.நகர் 2-வது வீதியில் மழை நீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த பகுதி சேறும் சகதியுமாக வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் இருக்கிறது. இதன் காரணமாக இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் சாலையும் குண்டும் குழியுமாக இருப்பதுடன், அதில் தண்ணீரும் தேங்கி நிற்பதால் குழிகள் எங்கு இருக்கிறது என்றே தெரியாமல் இருக்கிறது. எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.

  செல்வராஜ், குனியமுத்தூர்.

வேகமாக செல்லும் வாகனங்கள்

  கோவை வெள்ளக்கிணறு மற்றும் துடியலூர் பகுதியில் தடை செய்யப்பட்ட நேரத்தில் கனரக வாகனங்கள் செல்கின்றன. குறிப்பாக துடியலூரில் இருந்து சரவணம்பட்டி செல்லும் சாலையில் அனுமதிக்கப்படாத நேரத்தில் கனரக வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் நடந்து வருகிறது. எனவே அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுத்து, அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே கனரக வாகனங்கள் செல்ல அனுமதிக்க வேண்டும். மேலும் அனுமதிக்கப்படாத நேரத்தில் வரும் கனரக வாகனங்கள் மீது கடும் நடவடிக்ைக எடுக்க வேண்டும்.

  ராஜா, வெள்ளக்கிணறு.

பயன்படுத்த முடியாத கழிவறை 

  கோவையை அடுத்த தொண்டாமுத்தூர் அருகே உள்ள பூலுவபட்டியில் அங்கன்வாடி மையம் உள்ளது. இந்த மையத்துக்கு படிக்க வரும் குழந்தைகள் பயன்படுத்த கழிவறை உள்ளது. இந்த கழிவறை போதிய பராமரிப்பு இல்லாமல் உடைந்து, தகர்ந்து பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது. இதனால் இங்கு வரும் குழந்தைகள் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இதன் காரணமாக குழந்தைகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கும் இந்த கழிவறையை சீரமைக்க வேண்டும்.

  ராம்குமார், பூலுவப்பட்டி.

அடிக்கடி விபத்து

  கோவை அருகே உள்ள சோமனூரில் இருந்து கருமத்தம்பட்டி செலலும் வழியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி அருகே டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு வரும் மதுபான பிரியர்கள் மதுக்களை வாங்கி அங்கேயே குடித்துவிட்டு வாகனங்களை தாறுமாறாக ஓட்டுகிறார்கள். இதன் காரணமாக இந்தப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பயந்தபடி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. இது குறித்து அதிகாரிகளிடம் புகார் செய்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் இந்த டாஸ்மாக் கடையை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும்.

  கலையரசன், சோமனூர்.

குண்டும் குழியுமான சாலை

  கோவையை அடுத்த கணுவாய் சாலையில் வெங்கிடாபுரம் முதல் டி.வி.எஸ்.நகர் வரை சாலை மிகவும் படுமோசமாக காட்சியளிக்கிறது. இந்த சாலை குண்டும்-குழியுமாக இருப்பதால் இந்த வழியாக செல்லும் பள்ளி மாணவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். தற்போது மழை பெய்வதால் அங்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் சாலையில் குழி இருப்பது தெரியாமல் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அதில் சிக்கி கீழே விழுந்து காயங்களுடன் தப்பிச்செல்லும் நிலை நீடித்து வருகிறது. எனவே அதிகாரிகள் இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.

  அருண்குமார், கணுவாய்.

தினத்தந்தி செய்தி எதிரொலி:

மின்விளக்கு சரிசெய்யப்பட்டது

  கோவை சவுரிபாளையம் பிரிவு, அய்யப்பன்கோவில் தெரு பகுதியில் மின்விளக்குகள் ஒளிராமல் இருந்தது. இதனால் இரவு நேரத்தில் அங்கு இருள் சூழ்ந்து இருந்ததால் இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனர். இது குறித்து தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியிடப்பட்டது. அதன்பயனாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பழுதான அந்த மின்விளக்குகளை சரிசெய்து ஒளிர செய்தனர். எனவே செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி.

  பிரதீப், சவுரிபாளையம் பிரிவு.

1 More update

Next Story