வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்


வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 21 April 2022 6:09 PM IST (Updated: 21 April 2022 6:09 PM IST)
t-max-icont-min-icon

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சீபுரம்,

தமிழக அரசின் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் 10-ம் வகுப்பு தோல்வி அடைந்தவர்களுக்கு ரூ.200, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300 (மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரை 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை ரூ.600), 12-ம் வகுப்பு தேர்ச்சி, பட்டயப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.400 (மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரை ரூ.750) மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.600 (மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரை ரூ, 1000) வீதம் மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் இந்த திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற,

காஞ்சீபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் மேற்காணும் கல்வித்தகுதிகளை பதிவு செய்து குறைந்தது 5 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும். (மாற்றுத்திறனாளிகளை பொறுத்த வரை ஓராண்டு நிறைவு பெற்றிருந்தாலே போதும்.)

பதிவினை தொடர்ந்து புதுப்பித்திருக்க வேண்டும். எம்.பி.சி., பி.சி. பிரிவினர் 40 வயதிற்குட்பட்டவராகவும், எஸ்.சி. எஸ்.டி. பிரிவினர் 45 வயதுக்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். (மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு இல்லை). விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். (மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான வரம்பு இல்லை). ஏற்கனவே வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை பெற்றிருக்கக்கூடாது. தினசரி மாணவராக பயின்று வருவோருக்கு உதவித்தொகை பெற தகுதியில்லை. மேற்காணும் அனைத்து தகுதிகளும், விருப்பமும் உள்ள பதிவுதாரர்கள் காஞ்சீபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்படும் விண்ணப்பத்தை நேரில் வருகைபுரிந்து பெற்று கொள்ளலாம் அல்லது www.tnvelaivaaippu.gov.in//empower என்ற இணையதள முகவரியிலும் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் அதில் குறிப்பிட்டுள்ளவாறு வருவாய் ஆய்வாளர் அளவில் வழங்கப்பட்ட வருமான சான்று, மாற்றுச்சான்றிதழ், கல்விச்சான்று நகல், ஆதார் அட்டை நகல், ரேஷன்கார்டு நகல் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் சேமிப்பு கணக்கு புத்தக நகல் இணைத்து காஞ்சீபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். உதவித்தொகை பெறுவதால் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக பெறப்படும் பரிந்துரைகள் எதுவும் பாதிக்கப்படமாட்டாது.

விண்ணப்பம் பெறுதல் மற்றும் பூர்த்தி செய்த விண்ணப்பம் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வரும்போது கொரோனா தொடர்பான முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு இந்த உதவித்தொகையை பெற விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 More update

Next Story