கோவை அருகே ஊருக்குள் புகுந்த யானைகள் பாசம் காட்டிய பொதுமக்களிடம் பணிந்த சென்ற ருசிகர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கோவை அருகே ஊருக்குள் புகுந்த யானைகள் பாசம் காட்டிய பொதுமக்களிடம் பணிந்த சென்ற ருசிகர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
பேரூர்
கோவை அருகே ஊருக்குள் புகுந்த யானைகள் பாசம் காட்டிய பொதுமக்களிடம் பணிந்த சென்ற ருசிகர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள்
கோவையை அடுத்துள்ள தொண்டாமுத்தூர் அருகே நரசீபுரம் உள்ளது. இங்குள்ள வனப்பகுதியில் இருந்து ஒரு குட்டியுடன் 5 காட்டு யானைகள் வெளியே வந்தன.
பின்னர் அங்குள்ள குப்பேபாளையத்துக்குள் புகுந்து அங்கு சாகுபடி செய்து இருந்த வாழை உள்ளிட்ட பயிர்களை நாசப்படுத்தின.
பின்னர் அங்கிருந்து வெளியேறிய காட்டு யானைகள், அங்குள்ள பகுதியில் சுற்றி வந்தன. அதை அறிந்த பொதுமக்கள் தங்கள் வீடுகளின் மொட்டை மாடியில் ஏறி நின்று அந்த யானைகளை வனப்பகுதிக்குள் போகும்படி கூறினார்கள்.
உடனே அதை கேட்டு கீழ்ப்படிந்த காட்டு யானைகள் தோட்டத்தை விட்டு வெளியேறி சென்றன.
பொதுமக்களுக்கு கீழ்படிந்தன
அந்த காட்டு யானைகள் குட்டியுடன் தோட்டத்தை விட்டு வெளியேறுவதற்கு வந்தபோது சூரிய ஒளி மின்வேலி இருந்தது. உடனே அங்கிருந்த பொதுமக்கள் அய்யோ...மின்வேலி... அங்கு போகாதீங்க....
அது பட்டா வலிக்கும் சாமி, கூடவே பிஞ்சு பிள்ளையை (குட்டியானை) வேறு கூட்டிட்டு வந்துட்டீங்க....
மின்வேலி குழந்தை மேல பட்டா தாங்காது சாமி.... என்றுக்கூற ,உடனே அந்த யானைகளும் பொதுமக்களின் பாசம் நிறைந்த சொல்லுக்கு கீழ்ப்படிந்து சிறிது நேரம் அங்கேயே நின்றன.
இந்த நிலையில் பொதுமக்களின் ஒருவர் சத்தமாக, மின்வேலியில் உள்ள ஒரு லைனை அமுத்திட்டு போ, உடைஞ்சாலும் பரவாயில்ல என்று கூற,
உடனே அதி்ல் வந்த ஒரு யானை மின்வேலியை காலால் மிதிக்க, மற்றொரு தாய் யானை அதன் குட்டியை தனது துதிக்கையால் வேலி வழியாக தள்ளிக்கொண்டே சென்றது.
அப்போது அங்கிருந்த ஒரு பெண் அப்படி தள்ளாத சாமி... அது பச்ச புள்ள... அதற்கு வலிக்குமே என்று கூற, அதையும் கேட்டபடி அந்த யானை தனது குட்டியை அணைத்தபடி மின்வேலியை தனது காலால் மிதித்துவிட்டு அதை கடந்து சென்றது.
சமூக வலைத்தளத்தில் வைரல்
பின்னர் தோட்டத்தைவிட்டு வெளியே வந்ததும் சரி... போய்ட்டுவாங்க என்று கூற அதுவும் சாலையில் நடந்து சென்றன.
இதனை தொடர்ந்து அந்த யானைகள் சாலையைவிட்டு கீழே இறங்கி பக்கத்து தோட்டத்துக்குள் செல்ல முயன்றது.
உடனே அங்கு நின்றவர்கள் அங்கு போகாதீங்க.... நேரா ரோட்டுலேயே போங்க, போயி காட்டுக்குள் போயிருங்க... என்று கூறினார்கள்.
உடனே அதையும் கேட்டதுபோல் அந்த யானைகள் நேராக ரோட்டிலேயே சென்றன. அப்போது அங்கு வாகனத்தில் வந்த வனத்துறையினர், ஹாரன் அடித்தபடி அந்த யானைகளை துரத்தினார்கள்.
அப்போது பொதுமக்கள், பச்சக்குழந்தையோட வந்திருக்கு....
துரத்தாதீங்க...துரத்தாதீங்க...அதுக பாவம் நேரா போயிரும்... ஓட வைக்காதீங்க என்று கூறினார்கள்.
பெற்ற பிள்ளைகளே சொல்போச்சு கேட்காமல் இருக்கும் நிலையில், வனப்பகுதியில் கம்பீரமாக வலம் வரும் காட்டு யானைகள், ஊருக்குள் வந்ததும் பாசம் காட்டி பேசிய பொதுமக்களின் சொல் பேச்சு கேட்டு பணிந்து சென்றது பார்க்கவே ஆச்சரியமாக இருந்தது.
இந்த காட்சியை சிலர் தங்களின் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்தனர்.
அது வைரலாக பரவி வருகிறது.இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, மக்களிடம் பழகிய யானைகள் நாம் சொல்லும்போது கேட்கும்.
கோவையில் அடிக்கடி உலா வந்த சின்னதம்பி யானை, நாங்கள் சொன்னதை கேட்டு நடந்தது. அதுபோன்று இந்த யானைகளும் அடிக்கடி ஊருக்குள் வந்து பழக்கப்பட்டதாக இருக்கலாம் என்றனர்.
Related Tags :
Next Story