மழைநீர் கால்வாயில் மலைபோல் குவிந்த கழிவுகள்
கிணத்துக்கடவில் மழைநீர் கால்வாயில் கழிவுகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. இதனால் ஏற்படும் துர்நாற்றத்தால் பொதுமக்கள் கடும் அவதி அடைகின்றனர்.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவில் மழைநீர் கால்வாயில் கழிவுகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. இதனால் ஏற்படும் துர்நாற்றத்தால் பொதுமக்கள் கடும் அவதி அடைகின்றனர்.
மழைநீர் கால்வாய்
கோவை-பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையில் கிணத்துக்கடவு மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சர்வீஸ் சாலை உள்ளது. இந்த சாலையோரத்தில் பொதுமக்கள் நடந்து செல்ல வசதியாக மழைநீர் கால்வாய் மீது சிமெண்டு நடைபாதை அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் அந்த மழைநீர் கால்வாயில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் குப்பைகள், கழிவுகளை கொட்டி வருகின்றனர். இதன் காரணமாக அந்த பகுதியில் மலைபோல் குப்பை, கழிவுகள் குவிந்து கிடக்கிறது. மேலும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த வழியே சென்று வரும் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர். அவர்கள் மூக்கை மூடியபடி நடந்து செல்லும் நிலை காணப்படுகிறது.
சுகாதார சீர்கேடு
இது தொடர்பாக வடபுதூர் ஊராட்சி நிர்வாகம் சார்பில் தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு பலமுறை புகார் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை அந்த குப்பைகளை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- கோவை-பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையில் கிணத்துக்கடவு ஊருக்குள் மேம்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் கீழ் பகுதியில் போடப்பட்ட சர்வீஸ் சாலையோரத்தில் பொதுமக்கள் நடந்து செல்ல வசதியாக மழைநீர் கால்வாய் மீது சிமெண்டு சாலை அமைக்கப்பட்டு இருக்கிறது.
ஆக்கிரமிப்பு கடைகள்
அந்த மழைநீர் கால்வாயில் அதனருகில் உள்ள கடை வியாபாரிகள் கழிவு பொருட்களை கொட்டி செல்கின்றனர். மேலும் பொதுமக்களும் குப்பைகளை கொண்டு வந்து போடுகின்றனர். கிணத்துக்கடவு பகுதியில் அவ்வப்போது மழை பெய்வதால், அந்த குப்பைகளில் மழைநீர் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
இது தவிர அந்த நடைபாதையை ஆக்கிரமித்து சிலர் கடை போட்டு உள்ளனர். இதனால் அந்த வழியாக இடையூறு இன்றி நடந்து செல்ல முடியவில்லை. எனவே தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, அந்த பகுதியில் சுகாதாரத்தை பேண வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story