ஏரியில் மூழ்கி வாலிபர் சாவு

காஞ்சீபுரத்தில் ஏரியில் மூழ்கி வாலிபர் உயிரிழந்தார்.
படப்பை,
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பூச்சியேந்தல் அரணையூர்புதூர் கொக்கையா பிள்ளை தெருவில் வசித்து வந்தவர் வசந்த் (வயது 24). இவர் காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை பகுதியில் தங்கியிருந்து சுங்குவார் சத்திரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். இவர் தன்னுடன் வேலை செய்து வந்த தினேஷ், பெரியாண்டவர், அமுல்ராஜ், ஆகிய 3 பேருடன் சேர்ந்து நேற்று முன்தினம் மணிமங்கலம் ஏரிக்கு செல்பி எடுக்க சென்றுள்ளார்.
செல்பி எடுத்து முடித்துவிட்டு 4 பேரும் ஏரி கரையில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது கை, கால்களை கழுவுவதற்காக வசந்த் மட்டும் ஏரியில் இறங்கியதாக கூறப்படுகிறது. அவர் நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் 3 பேரும் ஏரிக்கு சென்று தேடிப் பார்த்துள்ளனர். அப்போது வசந்த் ஏரியில் மூழ்கி உயிரிழந்து இருப்பது தெரியவந்தது.
அவரது உடலை 3 பேரும் சேர்ந்து மீட்டு கரை சேர்த்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மணிமங்கலம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story






