ரெயிலில் கடத்தி வரப்பட்ட 63 கிலோ கஞ்சா பறிமுதல்
ரெயிலில் கடத்தி வரப்பட்ட 63 கிலோ கஞ்சா பறிமுதல்
கோவை
தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்களை போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி கைது செய்து வருகின்றனர். கோவை ரெயில்வே போலீஸ் துணை சூப்பிரண்டு யாஷ்மீன் தலைமையில் போலீசார் ரெயில்களில் கடத்தி வரப்படும் கஞ்சாவை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் அசாம் மாநிலம் சாலிமரில் இருந்து கோவை வழியாக திருவனந்தபுரம் செல்லும் ரெயிலில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக தகவல் கிடைத்தது.
இந்த ரெயில் நேற்று காலை 10.15 மணிக்கு கோவை ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. இதையடுத்து ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகாமி ராணி, சப்-இன்ஸ்பெக்டர் ராமன் மற்றும் போலீசார் அந்த ரெயிலில் ஏறி ஒவ்வொரு பெட்டியாக சோதனை செய்தனர். அப்போது ஒரு முன்பதிவு பெட்டியில் சீட்டுக்கு அடியில் சாக்குபையில் ஏராளமான பார்சல்கள் இருந்தன.
அந்த பார்சல்களை ரெயில்வே போலீசார் பிரித்து பார்த்தனர். அப்போது அதில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. மொத்தம் 40 பார்சல்களில் 63 கிலோ கஞ்சா இருந்தது. இதையடுத்து அந்த பெட்டியில் சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த சுனில் முண்டா (வயது 39) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.7 லட்சம் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story