குடியிருப்பு சங்க தலைவர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு


குடியிருப்பு சங்க தலைவர் உள்பட  3 பேர் மீது வழக்குப்பதிவு
x
குடியிருப்பு சங்க தலைவர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு
தினத்தந்தி 26 April 2022 8:22 PM IST (Updated: 26 April 2022 8:22 PM IST)
t-max-icont-min-icon

குடியிருப்பு சங்க தலைவர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு

வடவள்ளி

கோவை வடவள்ளி அருகே தொண்டாமுத்தூர் செல்லும் சாலையில் தனியாருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்பை சேர்ந்தவர் பிரதீஷ். இவர் துபாயில் உள்ள நகைக்கடை ஒன்றில் வேலை பார்க்கிறார்.இவரது மனைவி சுகன்யா தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர்களது மகன் லக் ஷன் (வயது11) தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். சுகன்யா தற்போது கர்ப்பிணியாக உள்ளார்.

இந்தநிலையில் சம்பவத்தன்று விடுமுறை தினம் என்பதால் சுகன்யா தனது மகனை அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள பூங்காவிற்கு அழைத்துச் சென்றார். அங்கு அந்த குடியிருப்பை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களுடன் சேர்ந்து லக்ஷனும் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது லக் ஷன் அங்கு அறுந்து கிடந்த மின் ஒயரை தெரியாமல் மிதித்துவிட்டான். இதில் மின்சாரம் தாக்கி சிறுவன் லக் ஷன்  சம்பவ  இடத்திலேயே பரிதாபமாக இறந்தான்.

இதுகுறித்து தகவல் அறிந்த வடவள்ளி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு  பிரேத பரிசோதனை நடந்தது. இதுகுறித்து சிறுவனின் சித்தப்பா மங்களேஸ்வரன் வடவள்ளி போலீசில் புகார் மனு அளித்தார். 

அதில், அடுக்குமாடி குடியிருப்பு சங்கம் மற்றும் பூங்காவை பராமரிப்பாளர்கள் தான், இந்த உயிரிழப்புக்கு  காரணம் என்றும்,  ஆகவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அடுக்குமாடி குடியிருப்பு சங்க தலைவர்,பூங்கா பராமரிப்பாளர் மற்றும் எலக்ட்ரீஷியன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும்  3பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story