பர்னிச்சர் கடை உரிமையாளரிடம் 6 மணி நேரம் விசாரணை
பர்னிச்சர் கடை உரிமையாளரிடம் 6 மணி நேரம் விசாரணைபர்னிச்சர் கடை உரிமையாளரிடம் 6 மணி நேரம் விசாரணை
கோவை
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 24.4.2017-ந் தேதி காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளி கிருஷ்ணதாபா படுகாயம் அடைந்தார். மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்களும் கொள்ளை அடிக்கப்பட்டது.
இது தொடர்பாக கேரளாவை சேர்ந்த சயான், மனோஜ், திபு, சதீசன், சம்சீர் அலி, பிஜின், சந்தோஷ் சாமி, மனோஜ்சாமி, ஜித்தின்ஜாய், உதயகுமார் ஆகிய 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 28-ந் தேதி சேலத்தில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். கோடநாடு கொலை மற்றும் கொள்ளை குறித்து முழு விசாரணை நடத்த 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அவர்கள், இதுவரை 200-க்கும் மேற்பட்டவர்களி டம் விசாரணை நடத்தி உள்ளனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை ஊட்டி கோர்ட்டில் நடை பெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி, அவரது மகன், தம்பி மகன், முன்னாள் உதவியாளர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த நிலையில் கடந்த வாரம் சசிகலாவிடம் மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையில் போலீசார் 2 நாட்கள் விசாரணை நடத்தினர். இதனிடையே கோடநாடு பங்களாவில் மர வேலைப்பாடுகள் செய்த பர்னிச்சர் கடை உரிமையாளரும், அ.தி.மு.க. நிர்வாகியுமான சஜீவனிடம் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் முடிவு செய்தனர். இதற்காக போலீசார் சஜீவனுக்கு சம்மன் அனுப்பினர்.
இதைத்தொடர்ந்து சஜீவன் கோவை பி.ஆர்.எஸ். போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் தனிப்படை முன் நேற்று காலை 11 மணிக்கு ஆஜரானார். அவரிடம் ஐ.ஜி. சுதாகர் மற்றும் தனிப்படை போலீசார் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர். மேலும் கொள்ளை சம்பவம் நடைபெற்ற போது சஜீவன் துபாயில் இருந்ததாக கூறப்படுகிறது.
எனவே அவர் எதற்காக துபாய் சென்றார், கோடநாடு பங்களாவில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் தொடர்பு உள்ளதா? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை தனிப்படையினர் எழுப்பினர். சஜீவன் நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் கோவை போத்தனூரில் பர்னிச்சர் கடை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story






