குட்டியுடன் இறந்து கிடந்த காட்டு யானை
சிறுமுகை வனப்பகுதியில் குட்டியுடன் காட்டு யானை இறந்து கிடந்தது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேட்டுப்பாளையம்
சிறுமுகை வனப்பகுதியில் குட்டியுடன் காட்டு யானை இறந்து கிடந்தது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வனத்துறையினர் ரோந்து
கோவை வனக்கோட்டத்திற்கு உட்பட்ட சிறுமுகை வனப்பகுதியில் காட்டுயானைகள் கூட்டம் கூட்டமாக நடமாடி வருகின்றன. தற்போது அடர்ந்த வனப்பகுதியில் வறட்சி காரணமாக உணவு மற்றும் நீர் நிலைகளை தேடி காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் இடம் பெயர்ந்து செல்கின்றன.
இந்த நிலையில் சிறுமுகை வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் நேற்று முன்தினம் சிறுமுகை வனச்சரகம், மோதூர் பெத்திக்குட்டை காப்புக்காடு, இரட்டைக்கண் பாலம் சரக வனப்பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
குட்டியுடன் இறந்து கிடந்த யானை
அப்போது பவானிசாகர் அணை பகுதியில் 20 வயது மதிக்கத்தக்க பெண் காட்டு யானை ஒன்று கருச்சிதைவு ஏற்பட்ட நிலையில் குட்டி யானையுடன் இறந்து கிடந்தது. வனத்துறையினர் இதுகுறித்து சிறுமுகை வனச்சரக அலுவலர் செந்தில்குமார் மாவட்ட வன அலுவலர், அரசு வன கால்நடை மருத்துவர் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து நேற்று காலை மாவட்ட வன அலுவலர் அசோக் குமார், உதவி வனப்பாதுகாவலர் செந்தில்குமார், அரசு கால்நடை மருத்துவர்கள் சுகுமாரன், கால்நடை மருத்துவர்கள் தியாகராஜன், வேடியப்பன், சிறுமுகை வனச்சரக அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குட்டியுடன் இறந்து கிடந்த காட்டு யானையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பிரசவத்தின்போது சிக்கல்
பின்னர் அரசு வனக்கால்நடை மருத்துவர் சுகுமாரன் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. யானை இறந்த காரணத்தை கண்டறிய மாதிரி உடற்கூறு பாகங்கள் சேகரிக்கப்பட்டது. தொடர்ந்து சுகுமாரன் கூறியதாவது:-
யானைக்கு பிரசவத்தின்போது சிக்கல் ஏற்பட்டு வயிற்றில் இருந்த சிசுவும் இறந்த நிலையில் பிறந்துள்ளது. அதன்பின்னர் தாய் யானையும் பரிதாபமாக இறந்துள்ளது. இறந்த பெண் யானை நிறைமாத கர்ப்பிணி யானையாகும்.
யானையின் உடலில் காயங்களோ அல்லது மற்ற யானைகளோடு சண்டை போட்ட காயங்களோ இல்லை. யானை இறந்து 2 நாட்களுக்குள் இருக்கும். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே யானை இறந்ததற்கான உண்மையான காரணம் தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார்.
சிறுமுகை வனப்பகுதியில் காட்டு யானைகள் ரத்தசோகை உள்பட பல்வேறு நோய்கள் தாக்கி தொடர்ந்து உயிரிழந்து வரும் சம்பவம் வனஆர்வலர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் தற்போது பிரசவத்தின்போது குட்டியுடன் தாய் யானை இறந்த சம்பவம் வன ஆர்வலர்கள் மற்றும் அந்த பகுதி கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story