களைகட்டிய பொள்ளாச்சி மாட்டு சந்தை


களைகட்டிய பொள்ளாச்சி மாட்டு சந்தை
x
தினத்தந்தி 26 April 2022 10:38 PM IST (Updated: 26 April 2022 10:38 PM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி மாட்டு சந்தை நேற்று களைகட்டியது. காங்கேயம் காளை ரூ.75 ஆயிரம் வரை விற்பனையாது.

பொள்ளாச்சி

பொள்ளாச்சி மாட்டு சந்தை நேற்று  களைகட்டியது. காங்கேயம் காளை ரூ.75 ஆயிரம் வரை விற்பனையானது.

மாட்டு சந்தை

பொள்ளாச்சியில் வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் மாட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். சந்தைக்கு கோவை மாவட்டம் மட்டுல்லாது வெளி மாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.

இந்த நிலையில் பொள்ளாச்சியில் நேற்று மாட்டுச்சந்தை நடைபெற்றது. இதையொட்டி பல்வேறு இடங்களில் இருந்து விற்பனைக்கு மாடுகள் கொண்டுவரப்பட்டன. 

இதற்கிடையில் வருகிற 3-ந் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவதால் வழக்கத்தை விட சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகரித்து இருந்தது. இதனால் பொள்ளாச்சி மாட்டு சந்தை களைகட்டியது.

காங்கேயம் காளை

வழக்கத்தைவிட மாடுகள் வரத்து அதிகரித்து இருந்தபோதிலும் விலை குறையவில்லை. சிலர் விவசாய பணி மற்றும் வளர்க்க மாடுகளை வாங்கிச்சென்றனர். 

மேலும் இறைச்சிக்காக கேரளாவில் இருந்து அதிகளவு வியாபாரிகள் வந்து மாடுகளை வாங்கி சென்றனர். இதில், காங்கேயம் காளை அதிகபட்சமாக ரூ.65 ஆயிரத்தில் இருந்து ரூ.75 ஆயிரம் விற்பனை ஆனது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-

விலை விவரம்

கடந்த வாரம் நடைபெற்ற சந்தைக்கு 2 ஆயிரம் மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இதற்கிடையில் வருகிற 3-ந் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவதால் கடந்த வாரத்தை விட நேற்று வரத்து அதிகரித்து 3 ஆயிரம் மாடுகள் விற்பனைக்கு வந்தன. கேரளாவில் இருந்து சுமார் 250 வியாபாரிகள் மாடுகளை வாங்குவதற்கு வந்திருந்தனர். இதனால் விற்பனையும் விறு, விறுப்பாக நடந்தது.

காங்கேயம் காளை ரூ.65 ஆயிரத்தில் இருந்து ரூ.75 ஆயிரம் வரையும், பசு மாடு ரூ.40 ஆயிரத்தில் இருந்து ரூ.45 ஆயிரம் வரையும், நாட்டு எருமை ரூ.45 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரம் வரையும், மொரா ரூ.55 ஆயிரத்தில் இருந்து ரூ.60 ஆயிரம் வரையும், செர்சி ரூ.30 ஆயிரத்தில் இருந்து ரூ.35 ஆயிரம் வரையும் விற்பனை ஆனது. வரத்து அதிகரித்தும் கடந்த வாரத்தை விட மாடுகள் விலையும் அதிகரித்து இருந்தது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story