கோவை கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலி


கோவை கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 1 May 2022 10:13 PM IST (Updated: 2 May 2022 2:55 PM IST)
t-max-icont-min-icon

ஆழியாறு அணையில் மூழ்கி கோவை கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலியாகினர்.

பொள்ளாச்சி:

ஆழியாறு அணையில் மூழ்கி கோவை கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலியாகினர். 

கல்லூரி மாணவர்

தென்காசி மாவட்டம் கடையம் பகுதிைய சேர்ந்தவர் ஸ்ரீராமர்(வயது 21). இவர் கோவையில் தங்கியிருந்து, கணபதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். 

அதே நிறுவனத்தில், பகுதி நேர ஊழியராக கோவையை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர் நவீன்குமார்(19) வேலை பார்த்து வந்தார். இவர்கள் தங்களது நண்பர்கள் சிலருடன், இன்று ஆழியாறு அணை பகுதிக்கு சுற்றுலா வந்தனர். பின்னர் நீர்பிடிப்பு பகுதிகளில் ஒன்றான ஊட்டுக்கால்வாய் தண்ணீர் கலக்கும் இடத்தில், அணைக்குள் இறங்கி குளித்தனர். 

பிணமாக மீட்பு

அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற ஸ்ரீராமர் திடீரென தண்ணீரில் மூழ்கினார். உடனே நவீன்குமார், அவரை காப்பாற்ற சென்றார். ஆனால் அவரும் தண்ணீரில் மூழ்கினார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்களது நண்பர்கள் உடனடியாக பொள்ளாச்சி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். 

அதன்பேரில் நிலைய அலுவலர் புருஷோத்தமன் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து, அணையில் மூழ்கிய 2 பேரையும் தேடினர். சுமார் 1 மணி நேர போராட்டத்துக்கு பிறகு ஸ்ரீராமர் மற்றும் நவீன்குமார் ஆகியோர் பிணமாக மீட்கப்பட்டனர். அவர்களது உடல்களை ஆழியாறு சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக்குமார் கைப்பற்றி பிரோத பரிசோதனைக்காக கோட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார். 

Next Story