நிதி நிறுவனத்தில் ரூ.2¼ லட்சம் கொள்ளை


நிதி நிறுவனத்தில் ரூ.2¼ லட்சம் கொள்ளை
x
தினத்தந்தி 1 May 2022 10:24 PM IST (Updated: 1 May 2022 10:24 PM IST)
t-max-icont-min-icon

கோவை நவஇந்தியாவில் நிதி நிறுவன ஊழியரின் முகத்தில் மயக்க மருந்து தடவி ரூ.2¼ லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கோவை

கோவை நவஇந்தியாவில் நிதி நிறுவன ஊழியரின் முகத்தில் மயக்க மருந்து தடவி ரூ.2¼ லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நிதி நிறுவனம்

கோவை நவ இந்தியாவை சேர்ந்தவர் பூமிநாதன் (வயது 35). இவர் அந்த பகுதியில் உள்ள நிதி நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இரவு பூமிநாதன் அலுவலகத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது சுமார் 9.30 மணியளிவில் முககவசம் அணிந்தபடி ஒருவர் அலுவலகத்திற்கு வந்தார்.

அவர் பூமிநாதனிடம் தான் வேலையின்றி உள்ளதாகவும், தங்கள் நிதி நிறுவனத்தில் வேலை ஏதும் உள்ளதா? என்று கேட்டுள்ளார். அதற்கு பூமிநாதன் இங்கு வேலை ஏதும் இல்லை என்று தெரிவித்தார். பின்னர் அந்த மர்ம ஆசாமி, பூமிநாதனிடம் குடிக்க தண்ணீர் கேட்டு உள்ளார். இதையடுத்து அவர் அலுவலகத்தில் உள்ள தண்ணீர் கேனில் இருந்து குடிநீர் பிடித்து குடிக்கும்படி கூறினார்.

ரூ.2¼ லட்சம் கொள்ளை

பின்னர் அந்த மர்ம ஆசாமி பூமிநாதனிடம் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அவர் தான் ஏற்கனவே மயக்க மருந்து தடவி வைத்திருந்த கைக்குட்டையை எடுத்து பூமிநாதன் முகத்தில் வைத்து அழுத்தினார்.

 இதையடுத்து சிறிது நேரத்தில் பூமிநாதன் மயக்கமடைந்து கீழே விழுந்தார்.
தொடர்ந்து மர்ம ஆசாமி நிதி நிறுவனத்தில் இருந்த  மேஜைகளில் பணம் உள்ளதா என்று தேடினார். அப்போது அங்கு மேஜை டிராயரில் இருந்த ரூ.2 லட்சத்து 32 ஆயிரத்து 250-ஐ கொள்ளையடித்து விட்டு, அந்த மர்ம ஆசாமி அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.

மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு

சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளித்ததும் பூமிநாதன் எழுந்திருந்து பார்த்தார். அப்போது நிதி நிறுவனத்தில் இருந்த பணம் கொள்ளைபோனது கண்டு அதிர்ச்சியடைந்தார். 

உடனடியாக இதுகுறித்து அவர் பீளமேடு போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் நிதி நிறுவன  அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story