டிரோன் கேமரா மூலம் கைதிகளை கண்காணிக்க முடிவு


டிரோன் கேமரா மூலம் கைதிகளை கண்காணிக்க முடிவு
x
தினத்தந்தி 2 May 2022 10:44 PM IST (Updated: 2 May 2022 10:44 PM IST)
t-max-icont-min-icon

கோவை மத்திய சிறையில் கைதிகளை டிரோன் கேமரா மூலம் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவை

கோவை மத்திய சிறையில் கைதிகளை டிரோன் கேமரா மூலம் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவை மத்திய சிறை

கோவை மத்திய சிறையில் விசாரணை கைதி, ஆயுள் தண்டனை கைதி, தூக்கு தண்டனை கைதி, தண்டனை கைதி என்று 1,700-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் சிலர் அத்துமீறி நடப்பதாகவும், சிறை அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

அதுபோன்று சிறை வளாகத்தில் கைதிகளுக்கு பீடி, சிகரெட் விற்கப்படுவதுடன், செல்போன்களும் அதிகளவில் பயன்படுத்துவதாக புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதை தடுக்க அதிகாரிகளும் அவ்வப்போது சோதனை நடத்தினாலும் அத்துமீறல்கள் அதிகரித்துதான் வருகிறது. அவற்றை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை.

டிரோன் கேமரா

இதை கண்காணிக்க சிறை வளாகத்துக்குள் 50-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. அதில் பதிவாகும் காட்சிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து கண்காணித்து வருகிறார்கள். இந்த நிலையில் இன்னும் கண்காணிப்பை தீவிரப்படுத்த டிரோன் கேமரா வாங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இது குறித்து சிறைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

தமிழகத்தில் உள்ள கோவை, மதுரை, சென்னை, பாளையங்கோட்டை, திருச்சி உள்பட 9 சிறைகளில் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ள டிரோன் (ஆளில்லா குட்டி விமானம்) வாங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக ரூ.22 லட்சம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. எனவே எந்த மாதிரியான டிரோன் கேமராவை வாங்குவது என்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.

குற்றங்கள் குறைய வாய்ப்பு
இந்த டிரோன் கேமராவை பறக்கவிட்டு அதன் மூலம் கண்காணிப்பதன் மூலம் சிறை வளாகத்தில் நடக்கும் அனைத்து காட்சிகளையும் துல்லியமாக கண்டுபிடிக்க முடியும். இதன் மூலம் அத்துமீறல்கள் குறைய வாய்ப்பு உள்ளது. அத்துடன் கைதிகள் சில அடாவடி செயல்களில் ஈடுபட்டால் அவற்றை ஆதாரப்பூர்வமாக கண்டுபிடிப்பதன் மூலம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது.

இதனால் அவர்கள் அதுபோன்ற செயலில் ஈடுபடுவதை தவிர்க்க வாய்ப்பு இருக்கிறது. எனவே விரைவில் டிரோன் கேமரா வாங்கப்பட்டு அதை சிறை வளாகத்தில் பறக்கவிட்டு கண்காணிக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story