21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மது விற்பனை செய்வது தடுக்கப்பட வேண்டும்
கோவையில் பள்ளி மாணவர்கள் உள்பட 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மது விற்பனை செய்வது தடுக்கப்பட வேண்டும் என்று கலெக்டரிடம் பொதுமக்கள் மனு வழங்கினர்.
கோவை
கோவையில் பள்ளி மாணவர்கள் உள்பட 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மது விற்பனை செய்வது தடுக்கப்பட வேண்டும் என்று கலெக்டரிடம் பொதுமக்கள் மனு வழங்கினர்.
குறைதீர்க்கும் கூட்டம்
கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் சமீரன் தலைமையில் நடைபெற்றது. இதில் முதியோர் உதவித்தொகை, நடைபாதை, வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் மனு அளித்தனர்.
குறைதீர்க்கும் கூட்டத்தையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மனு அளிக்க வந்த பொதுமக்களின் பைகள், குடிநீர் பாட்டில்கள் போலீசார் பரிசோதித்த பின்னரே கலெக்டர் அலுவலகத்திற்குள் அவர்களை அனுமதித்தனர்.
கூட்டத்தில் கலெக்டரிடம் பொதுமக்கள் மற்றும் பா.ம.க.வினர் அளித்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-
டாஸ்மாக் கடைகள் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே திறந்து இருக்க வேண்டும். ஆனால் இதனை மீறி கோவையில் பல்வேறு இடங்களில் டாஸ்மாக் பார்கள் அதிகாலை முதல் நள்ளிரவு வரை திறந்து வைக்கப்படுகிறது.
மேலும் வயது வித்தியாசமின்றி பள்ளி மாணவர்களுக்கும் மது விற்பனை செய்யப்படுவதால் வகுப்பறைகள் மற்றும் பொது இடங்களில் பிரச்சினை ஏற்படுகிறது. சில மாணவர்கள் கோஷ்டிகளாக பிரிந்து சண்டை போடுகின்றனர்.எனவே பள்ளி மாணவர்கள் உள்பட 21 வயதுக்கு உட்பட்ட வர்களுக்கு மது விற்பனை செய்வது தடுக்கப்படவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
தடுப்பணைகள்
தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்ட தலைவர் பழனிசாமி மற்றும் விவசாயிகள் அளித்த மனுவில், சூலூர் தாலுகா மோப்பிரிபாளையம் கிராமம் எம்.பாப்பம்பட்டி பகுதியில் கவுசிகா நதியின் குறுக்கே 2 தடுப்பணைகள் கட்டப்பட்டு உள்ளன.
ஆண்டுகள் பல கடந்து விட்டதால் இந்த தடுப்பணைகள் மண் நிரம்பி காணப்படுகிறது. எனவே இந்த தடுப்பணைகளை தூர் வார நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை எங்களது சொந்த செலவில் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது
கோவை அரசு ஆஸ்பத்திரி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் அளித்த மனுவில், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கோவை அரசு ஆஸ்பத்திரியில் 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பாக நிர்ணயிக்கப்பட்ட ரூ.475 கூலி வழங்காமல் 325 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது.
எங்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பாக நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை கூலியாக வழங்க வேண்டும். மேலும் ஆஸ் பத்திரியில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று உள்ளது.
மஸ்தூர் பணியாளர்கள்
மஸ்தூர் பணியாளர்கள் அளித்த மனுவில், கோவை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியில் ஏராளமான பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றோம். எங்களுக்கு ஒரு நாளைக்கு ஊதியமாக ரூ.180 வழங்கப்படுகிறது. கிராமப்புறங்களில் பல இடங்களுக்கு பஸ் வசதி இல்லாததால் நடந்து சென்று வருகின்றோம்.
மேலும் ஊராட்சி சார்பில் நோட்டு, பேனா போன்றவை வழங்கப்படுவது இல்லை. இதனால் நாங்கள் அதனை விலை கொடுத்து வாங்கி வருகின்றோம். எனவே எங்களது ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story