தேனி பஸ்நிலையத்தில் மேற்கூரை சேதம்


தேனி பஸ்நிலையத்தில் மேற்கூரை சேதம்
x
தினத்தந்தி 4 May 2022 11:09 PM IST (Updated: 4 May 2022 11:09 PM IST)
t-max-icont-min-icon

தேனி பஸ்நிலையத்தில் மேற்கூைர சேதமடைந்துள்ளது. இதனால் வெயில், மழையில் பயணிகள் பரிதவிக்கின்றனர்.

தேனி: 

ஆக்கிரமிப்புகள்
தேனி புறவழிச்சாலையில் கர்னல் ஜான் பென்னிகுயிக் பஸ் நிலையம் கடந்த 2013-ம் ஆண்டு இறுதியில் திறக்கப்பட்டது. இந்த பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பும், சுகாதாரக்கேடும் இரட்டை பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது. பஸ் நிலையம் திறக்கப்பட்ட சில மாதங்களிலேயே ஆக்கிரமிப்புகளும், கடைகள் மறுவடிவமைப்பு பணிகளும் தொடங்கி விட்டன.

இடைப்பட்ட சில காலங்களில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அதுவும் பெயரளவுக்கு அரைகுறை பணியாகவே நடந்து முடிந்தது. இதனால், பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பயணிகள் பஸ்சுக்காக காத்திருக்கும் நடைமேடைகள் ஆக்கிரமிப்பால் சுருங்கி விட்டன. இதனால், மக்கள் நிற்பதற்கு இடமின்றி வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் பரிதவிக்கும் நிலைமை உள்ளது.

சுகாதாரக்கேடு
பஸ் நிலையத்தை ஆக்கிரமிப்பு செய்து புதிது, புதிதாக கடைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு சில ஆக்கிரமிப்பு கடைகள் அமைக்கும் பணிகள் கலெக்டர் உத்தரவின்பேரில் தடுத்து நிறுத்தப்பட்டன. மீண்டும் அதே இடத்தில் கடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதுபோல், இருசக்கர வாகன காப்பகங்களின் நுழைவு வாயிலும் கடைகளாக மாறி வருகின்றன. இதனால், வாகன காப்பகங்களுக்குள் இருசக்கர வாகனங்களில் சென்று வர மக்கள் சிரமம் அடைகின்றனர்.

அதுபோல், பஸ் நிலையத்தில் உள்ள கட்டண கழிப்பிடங்கள் மற்றும் இலவச கழிப்பிடங்கள் முறையான பராமரிப்பு இன்றி துர்நாற்றம் வீசுகின்றனர். பஸ் நிலைய வளாகத்தில் உள்ள ஓட்டல் கழிவுகளும் நடைமேடையில் கொட்டப்படுவதால் மேலும் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.

மேற்கூரை சேதம்
அதேபோன்று, பஸ் நிலைய மேற்கூரை பல இடங்களில் சேதம் அடைந்துள்ளது. ஏற்கனவே ஆக்கிரமிப்பால் நடைமேடைகள் மற்றும் நடைபாதைகள் சுருங்கி உள்ள நிலையில், மேற்கூரையும் சேதம் அடைந்துள்ளதால் மழை பெய்தால் பயணிகள் உடைமைகளோடு நனைந்து பரிதவிக்கின்றனர். தற்போது கோடை வெயில் காலம் என்பதால் வெயிலுக்கு நிற்பதற்கு கூட நிழல் இல்லாத நிலைமை உருவாகி உள்ளது. எனவே, மேற்கூரையை சீரமைக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Next Story