காஞ்சீபுரத்தில் ‘ஷவர்மா’ விற்பனை கடைகளில் உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி சோதனை

காஞ்சீபுரத்தில் செயல்பட்டு வரும் ‘ஷவர்மா’ விற்பனை கடைகளில் உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி ஆய்வு மேற்கொண்டு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.
ஷவர்மா கடைகள்
கேரள மாநிலத்தில் ‘ஷவர்மா’ சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் காஞ்சீபுரத்திலும் முக்கிய சாலைகளில் ஷவர்மா கடைகள் அதிக அளவில் செயல்பட்டு வருகின்றனர். கோழி இறைச்சியினை வெளிபுறத்தில் வைத்து சூடேற்றி தயார் படுத்தி வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
ஷவர்மா சாப்பிட்டு மாணவி உயிரிழந்த சம்பவத்தை தொடந்து, காஞ்சீபுரத்தில் இயங்கி வரும் சுமார் 11 கடைகளில் நேற்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரி அனுராதா தலைமையில் 5 பேர் அடங்கிய குழுவினர் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.
அபராதம்
அப்போது சுகாதாரமற்ற முறையில் இயங்கிய 10 கடைகளுக்கு, ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் புத்தேரி தெரு பகுதியில் உரிய அனுமதி பெறாமல் செயல்பட்ட ஷவர்மா கடையினை அதிகாரிகள் பூட்டினர்.
மேலும் ஆய்வு மேற்கொண்ட 10 ஷவர்மா கடைகளில் இருந்தும் கோழி இறைச்சியினை எடுத்து சோதனைக்காக கிண்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான முடிவு வந்ததும் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி அனுராதா தெரிவித்தார்.
Related Tags :
Next Story






