24 ஆயிரத்து 212 பேர் எழுதினர்
24 ஆயிரத்து 212 பேர் எழுதினர்
திருப்பூர்,
பிளஸ்-2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. 24 ஆயிரத்து 212 பேர் தேர்வு எழுதினார்கள். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.
பிளஸ்-2 தேர்வு தொடங்கியது
திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கி வருகிற 28-ந் தேதி வரை நடக்கிறது. பிளஸ்-2 தேர்வை 218 மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் 25 ஆயிரத்து 717 மாணவ-மாணவிகள், தனித்தேர்வர்கள் 167 மாணவ-மாணவிகள் என மொத்தம் 25 ஆயிரத்து 884 பேர் 91 தேர்வு மையங்களில் எழுத வசதி செய்யப்பட்டு இருந்தது. வினாத்தாள்கள் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் இருப்பு வைக்கப்பட்டு இருந்தது. தேர்வு மையங்களில் மாணவ-மாணவிகள் இருக்கை ஒதுக்கீடு உள்ளிட்டவை செய்யப்பட்டு பதிவெண் தனித்தனியாக மேஜையில் எழுதப்பட்டு இருந்தது.
தேர்வு மையத்தின் முன்புறம் தேர்வு அறைகள் விவரம், மாணவ-மாணவிகளின் பதிவெண் விவரம் உள்ளிட்டவற்றை குறிப்பிட்டு வரைபடம் வைக்கப்பட்டு இருந்தது. அதன் மூலமாக எளிதாக மாணவ-மாணவிகள் தேர்வறைக்கு சென்றனர். காலை பள்ளிக்கு வந்ததும் மாணவ-மாணவிகள் தங்கள் கடவுளை வணங்கி விட்டு பயபக்தியுடன் தேர்வு அறைக்கு சென்றார்கள்.
1,499 பேர் தேர்வு எழுதவில்லை
மேல்நிலை பொதுத்தேர்வு மையங்களில் பணியாற்ற முதன்மை கண்காணிப்பாளர்களாக 91 தலைமை ஆசிரியர்களும், 91 துறை அலுவலர்களும், அறை கண்காணிப்பாளர்களாக பணியாற்ற 1,608 ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டு பணியாற்றினார்கள். மேல்நிலை பொதுத்தேர்வுக்கு முதன்மை கல்வி அதிகாரி மூலமாக 157 ஆசிரியர்களை கொண்ட பறக்கும்படை அமைக்கப்பட்டு கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
நேற்று மொழிப்பாடத்தேர்வு நடைபெற்றது. தமிழ் முதல் தாள் தேர்வுக்கு 25 ஆயிரத்து 348 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் 23 ஆயிரத்து 849 பேர் தேர்வு எழுதினார்கள். 1,499 பேர் தேர்வு எழுத வரவில்லை. இதுபோல் பிரெஞ்சு பாட தேர்வு எழுத 361 பேர் விண்ணப்பித்து 357 பேர் தேர்வு எழுதினார்கள். 4 பேர் தேர்வு எழுத வரவில்லை. இந்தி தேர்வுக்கு 6 பேர் விண்ணப்பித்து அனைவரும் தேர்வு எழுதினார்கள்.
இன்று எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடக்கம்
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 30-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தேர்வை 358 பள்ளிகளில் படிக்கும் 31 ஆயிரத்து 617 மாணவர்கள், 646 தனித்தேர்வர்கள் என மொத்தம் 32 ஆயிரத்து 263 பேர் 108 மையங்களில் தேர்வு எழுத உள்ளனர்.
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு மையங்களில் பணியாற்ற முதன்மை கண்காணிப்பாளராக 108 தலைமை ஆசிரியர்களும், 108 துறை அலுவலர்களும், அறை கண்காணிப்பாளர்களாக 1,780 ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்கு மாவட்ட கல்வி அதிகாரிகள் மூலமாக 178 ஆசிரியர்களை கொண்ட பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது. இணை இயக்குனர் தலைமையிலும் பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story