மாங்காடு அருகே 3 பிளாஸ்டிக் குடோன்களில் பயங்கர தீ விபத்து


மாங்காடு அருகே 3 பிளாஸ்டிக் குடோன்களில் பயங்கர தீ விபத்து
x
தினத்தந்தி 9 May 2022 1:54 PM IST (Updated: 9 May 2022 1:54 PM IST)
t-max-icont-min-icon

மாங்காடு அருகே அடுத்தடுத்து 3 பிளாஸ்டிக் குடோன்களில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட புகை மூட்டத்தால் பொதுமக்கள் மூச்சுத்திணறல், கண் எரிச்சலால் அவதிக்குள்ளானார்கள்.

பிளாஸ்டிக் குடோன்களில் தீ

மாங்காடு அடுத்த மலையம்பாக்கம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் தொழிற்சாலைகளில் இருந்து சேகரிக்கப்படும் பழைய பிளாஸ்டிக் மற்றும் இரும்பு பொருட்களை கொண்டு வந்து சேகரித்து வைத்து தரம் பிரிக்கும் சிறிய அளவிலான குடோன்கள் அருகருகே செயல்பட்டு வருகிறது.

நேற்று காலை யோகேஸ்வரன் என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் குடோனில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. காற்றின் வேகத்தில் தீ மளமளவென அருகில் உள்ள மேலும் 2 பிளாஸ்டிக் குடோன்களுக்கும் பரவியது.

ஒரே நேரத்தில் 3 பிளாஸ்டிக் குடோன்களும் தீப்பிடித்து எரிந்ததாலும், பிளாஸ்டிக் பொருட்கள் என்பதாலும் விண்ணை முட்டும் அளவுக்கு பல அடி உயரத்துக்கு கரும்புகை மூட்டம் எழுந்தது. இதனால் அருகில் வசிக்கும் மக்களுக்கு கண்எரிச்சல், மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் அவதிக்குள்ளானார்கள்.

3 மணிநேரம் போராட்டம்

இதுபற்றி தகவல் அறிந்துவந்த பூந்தமல்லி தீயணைப்பு நிலைய வீரர்கள், அந்த பகுதி பொதுமக்கள் உதவியுடன் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் கூடுதலாக கோயம்பேடு, மதுரவாயல், செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 5 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணி நேரம் போராடி பிளாஸ்டிக் குடோன்களில் எரிந்த தீயை அணைத்தனர்.எனினும் தீ விபத்தில் குடோன்களில் இருந்த ரூ.பல லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக், பழைய இரும்பு உள்ளிட்ட பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமாயின. குடியிருப்புகளுக்கு மத்தியில், உரிய அனுமதி இல்லாமல் அதிக அளவில் இதுபோல் செயல்படும் குடோன்களில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி, எளிதில் தீப்பிடித்து எரியக்கூடிய பொருட்களை சேகரித்து வைப்பதால் தீ விபத்து ஏற்பட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

இந்த சம்பவம் குறித்து மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் ஊழியர்கள் யாரும் பணியில் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.


Next Story