சூலக்கல் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா தொடங்கியது
கிணத்துக்கடவு அருகே சூலக்கல் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா தொடங்கியது. 3 நாட்கள் தேரோட்டம் நடக்கிறது.
கிணத்துக்கடவு
தேர் திருவிழா
கிணத்துக்கடவு அருகே உள்ள சூலக்கல்லில் பிரசித்தி பெற்ற மாரியம்மன்-விநாயகர் கோவில் உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக தேர் திருவிழா நடைபெறவில்லை. இந்தநிலையில் கோவில் தேர் திருவிழா காலை 9.30 மணிக்கு முகூர்த்தக்காய் உடைக்கும் நிகழ்ச்சியிடன் தொடங்கியது.
முன்னதாக சூலக்கல் ஆற்றில் இருந்து மூங்கில் கம்பம் மேளதாளம், வாணவேடிக்கை முழங்க கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.
நிகழ்ச்சியில் சூலக்கல் சுற்றுவட்டார பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவையொட்டி காலை 9 மணிக்கு வேல் புறப்பாடு, பூச்சாட்டு விழா நடைபெறுகிறது.
வருகிற 16-ந் தேதி இரவு 9 மணிக்கு கிராம சாந்தி, வாஸ்து சாந்தி பூஜை, 17-ந் தேதி இரவு 9 மணிக்கு கம்பம் நடுதல், பூவோடு எடுத்து வருதல், 18-ந் தேதி காலை 9 மணிக்கு யாகசாலை ஆரம்பம், கொடியேற்றம் நிகழ்ச்சிகள் நடக்கிறது.
திருவீதி உலா
இரவு 9 மணிக்கு மாரியம்மன் சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா, 19-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை தினசரி காலை, இரவு நேரங்களில் சூலக்கல் மாரியம்மன் திருவீதி உலாவும், பூவோடு எடுத்து வருதல், 25-ந் தேதி காலை 6 மணிக்கு மாவிளக்கு, பொங்கல் வைக்கும் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
பின்னர் அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
வருகிற 26, 27, 28-ந் தேதிகளில் தினமும் மாலை 4 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து தேரோட்டம் நடைபெறுகிறது. 29-ந் தேதி மதியம் 12 மணிக்கு சூலக்கல் மாரியம்மனுக்கு மகா அபிஷேகத்துடன் அன்னதானம் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை சூலக்கல் மாரியம்மன்-விநாயகர் கோவில் தக்காரும், உதவி ஆணையாளருமான கருணாநிதி, கோவில் செயல் அலுவலர் சுந்தரராசு, பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story