சாதி பெயரை கூறி பள்ளி மாணவர்களை திட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
பொள்ளாச்சி அருகே நல்லூத்துக்குளியில் சாதி பெயரை கூறி பள்ளி மாணவர்களை திட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சப்-கலெக்டரிடம் பொதுமக்கள் புகார் மனு கொடுத்தனர்.
பொள்ளாச்சி
கழிப்பிட வசதி
பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் செடிமுத்தூரை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், செடிமுத்துர் காலனியில் 70 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு பொதுக்கழிப்பிடம் மற்றும் தனி நபர் கழிப்பிடங்கள் இல்லை. இதனால் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றோம்.
இதனால் பெண்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து கழிப்பிடம் கட்டி கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. நல்லுத்துக்குளியை சேர்ந்த பொதுமக்கள் பள்ளி மாணவர்களுடன் வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
சாதி பெயர்
நல்லூத்துக்குளி மேற்கு காலனியில் ஆதிதிராவிட சமூகத்தை சேர்ந்தவர்கள் வசித்து வருகிறோம். இங்கு ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் 22 குழந்தைகள் படித்து வருகின்றனர். அதே பகுதியை சேர்ந்த சில மாணவர்கள், எங்கள் சமூகத்தை சேர்ந்த மாணவர்களை சாதி பெயரை கூறி திட்டியதுடன், விளையாட வரக் கூடாது என்று அடித்து துன்புறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து பள்ளி நிர்வாகம், ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் எங்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.
எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம். இதுகுறித்து சப்-கலெக்டர் விசாரணை நடத்தி தீர்வு காண வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
நடவடிக்கை
வேட்டைக்காரன்புதூரை சேர்ந்த சமூக ஆர்வலர் காந்திபூபதி உடலில் இலை, பூக்களை கட்டி கொண்டு வந்து கொடுத்த மனுவில்,
வேட்டைக்காரன்புதூர் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் ஆயுர்வேத மற்றும் சித்தா பிரிவு வளாகத்தில் பழமையான மரங்கள் உள்ளன. இந்த மரங்களில் இரவு நேரங்களில் காகங்கள் உள்ளிட்ட பறவைகள் வந்து உட்காருவதால் அவற்றின் எச்சத்தால் துர்நாற்றம் வீசுவது வழக்கம்.
இதனால் பறவைகள் வந்து அமராத மரங்களையும் வெட்டி உள்ளனர். நல்ல நிலையில் உள்ள மரங்களையும் மோசமாக உள்ளது என்று அதிகாரிகள் வெட்டுவதற்கு அனுமதி அளித்து உள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story