1,280 கிலோ ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது
பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு 1,280 கிலோ ரேஷன் அரிசி கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் சரக்கு வாகனம், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
பொள்ளாச்சி
போலீசார் ரோந்து
பொள்ளாச்சி மரப்பேட்டை பகுதியில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலையடுத்து இன்ஸ்பெக்டர் கோபிநாத் உத்தரவின் பேரில் போலீசார் உடுமலை ரோட்டில் நேற்று அதிகாலை ரோந்து சென்றனர்.
அப்போது மரப்பேட்டை பகுதியில் சந்தேகத்தின் பேரில் நின்ற சரக்கு வாகனத்தை போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது வாகனத்தில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் அங்கு நின்ற 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் கேரளாவை சேர்ந்த டிரைவர் பிரவீன்குமார் (வயது 35), ஆனந்த் (25), அஜித்குமார் (25) ஆகியோர் என்பது தெரியவந்தது.
3 பேர் கைது
அவர்கள் மரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, கேரளாவில் அதிக விலைக்கு விற்பனை செய்ய கடத்த முயன்றது தெரியவந்தது. மேலும் ரேஷன் அரிசியை கடத்தி செல்லும் சரக்கு வாகனத்திற்கு முன்பு சென்று போலீசாரிடம் சிக்காமல் கடத்தி செல்ல திட்டமிட்டு உள்ளனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரவீன்குமார், ஆனந்த், அஜித்குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 32 மூட்டைகளில் தலா 40 கிலோ வீதம் இருந்த 1,280 கிலோ ரேஷன் அரிசி, கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனம், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story