காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் - கொடியேற்றத்துடன் தொடங்கியது


காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் - கொடியேற்றத்துடன் தொடங்கியது
x
தினத்தந்தி 14 May 2022 10:31 PM IST (Updated: 14 May 2022 10:31 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரத்தில் உள்ள பழமையும் வரலாற்று சிறப்பும் மிக்க கோவில் வரதராஜபெருமாள் கோவில். இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக திருவிழா நடைபெறாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில் இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா நேற்று அதிகாலை 4 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோவில் பட்டாச்சாரியார்கள் கோவிலில் உள்ள கொடிமரத்தில் கருடாழ்வார் சின்னம் பொறித்த கொடியை ஏற்றினார்கள். கொடி மரத்திற்கு விசேஷ மந்திரங்கள் ஓத சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றது. அப்போது திரளான பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பினர்.

இதனைத்தொடர்ந்து ஸ்ரீதேவி பூதேவியருடன் உற்சவர் வரதராஜ பெருமாள் தங்க சப்பரத்தில் எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இந்த விழாவில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் வான்மதி, உதவி ஆணையர் முத்து ரத்தினவேலு, கோவில் செயல் அலுவலர் என்.தியாகராஜன் உள்பட பலரும் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு கோவில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. வாண வேடிக்கைகளும் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் உத்தரவின் பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது.

Next Story