வீட்டுக்குள் புகுந்த பாம்பிடம் போராடி உயிரை விட்ட நாய்
போடியில் எஜமானின் குடும்பத்தை காப்பாற்றுவதற்காக, வீட்டுக்குள் புகுந்த பாம்பிடம் போராடி நாய் உயிரை விட்ட சம்பவம் நெஞ்சை நெகிழ வைத்தது.
போடி:
வீட்டுக்குள் புகுந்த பாம்பு
தேனி மாவட்டம் போடி ராமசந்திரா நகரை சேர்ந்தவர் லட்சுமணன். இவர், திண்டுக்கல் எம்.வி.எம். அரசு மகளிர் கலைக்கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். அவருடைய மனைவி ஈஸ்வரி. இவர், போடியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறார்.
இந்த தம்பதி, கடந்த 13 ஆண்டுகளாக ‘ஜாக்கி’ என்ற நாயை வளர்த்து வந்தனர். வீட்டின் முன்பு உள்ள அறையில் அந்த நாயை கட்டிப்போடுவது வழக்கம். அதன்படி நேற்று இரவு அந்த அறையில் நாயை கட்டி போட்டனர்.
இந்தநிலையில் இன்று அதிகாலை 5.30 மணி அளவில் லட்சுமணனின் வீட்டுக்குள் பாம்பு ஒன்று புகுந்து விட்டது. இதனைக்கண்ட நாய், அந்த பாம்பை பார்த்து குரைத்து கொண்டிருந்தது.
உயிரை விட்ட நாய்
நீண்ட நேரம் நாய் குரைத்ததை கேட்ட லட்சுமணனும், ஈஸ்வரியும் திடுக்கிட்டு எழுந்தனர். படுக்கையில் இருந்து வெளியே வந்து பார்த்தபோது, வீட்டுக்குள் பாம்பு புகுந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து போடி தீயணைப்பு நிலையத்துக்கு லட்சுமணன் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) பாண்டியராஜன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர்.
சுமார் ஒரு மணி நேரம் போராடி, 6 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பை பிடித்தனர். இதற்கிடையே நாய் ஜாக்கி திடீரென மயங்கி விழுந்து உயிரை விட்டது. அதாவது வீட்டுக்குள் புகுந்த பாம்பை உள்ளே விடாமல் நாய் போராடி உள்ளது.
அப்போது பாம்பு, நாயை கடித்துள்ளது. இதனால் விஷம் ஏறி, நாய் பரிதாபமாக இறந்தது தெரியவந்தது. தன்னை வளர்த்த எஜமான் மற்றும் அவருடைய குடும்பத்தினரை காப்பாற்றுவதற்காக வீட்டுக்குள் புகுந்த பாம்பிடம் போராடி நாய் உயிரை விட்ட சம்பவம் அப்பகுதி மக்களின் நெஞ்சை நெகிழ வைத்தது.
Related Tags :
Next Story