பிரதமரின் வீடு கட்டும் திட்ட பணிகளை கண்காணிக்க வேண்டும்
பிரதமரின் வீடு கட்டும் திட்ட பணிகளை கண்காணிக்க வேண்டும் என பா.ஜனதா முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறினார்.
காரைக்குடி,
பிரதமரின் வீடு கட்டும் திட்ட பணிகளை கண்காணிக்க வேண்டும் என பா.ஜனதா முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறினார்.
பேட்டி
பா.ஜனதா கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா காரைக்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:-
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் பகுதியில் பிரதம மந்திரியின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 545 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கான திட்டத்தை செயல்படுத்தும் போது 435 வீடுகள் கட்டப்படாமலேயே பணம் எடுக்கப்பட்டுள்ளது என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடு கட்ட தவணை முறையில் பயனாளிகளின் பெயரிலேயே மத்திய அரசால் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் வழங்கப்படுகிறது. இத்தனை நடைமுறைகள் இருந்தும் அனைத்தையும் மீறி ஊழல் நடைபெற்றுள்ளது.
இதில் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அதிகாரியை கைது செய்ய வேண்டும். சில நாட்களுக்கு முன்பு கந்தர்வகோட்டை பகுதியிலும் இது போன்ற ஊழல் வெளிவந்துள்ளது.
கண்காணிக்க வேண்டும்
சிவகங்கை மாவட்டத்தில் இதுபோல 70 வீடுகள் கட்டப்படாமலேயே பணம் எடுக்கப்பட்டுள்ளதாக புகார் வந்துள்ளது. எனவே தமிழகம் முழுவதும் பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணிகளை முழுமையாக கண்காணிக்க வேண்டும். உண்மையான பயனாளிகளிடம் லஞ்சப்பணம் கேட்டு அவர்களுக்கு கொடுக்க வேண்டிய தவணைத்தொகைகளை கொடுக்க அதிகாரிகள் மறுக்கின்றனர். இது போன்ற நிகழ்வுகளால் திருவாரூர் மாவட்டத்தில் மணிகண்டன் என்ற வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவமும் நடந்துள்ளது. இதுகுறித்து அரசு மவுனம் சாதிப்பது ஏன் ? நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளை அரசு அதிகாரிகள் சுரண்டும் அவலநிலை உள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்துவோம். நிதி ஆதாரத்தை கருத்தில் கொள்ளாமலும் தங்களுக்கான அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட நிலையில் தேர்தல் வாக்குறுதிகளை அளித்ததாலும் அவற்றில் பலவற்றை தமிழக அரசால் நிறைவேற்ற முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story