சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
ஈரோட்டில் சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோட்டில் சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தார் சாலை
ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து மூலப்பட்டறைக்கு செல்லும் ஈ.வி.கே.சம்பத்ரோட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாதாள சாக்கடை திட்டப்பணிகளுக்காக குழிகள் தோண்டப்பட்டன. இதனால் அந்த வழியாக போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த பணிகள் முடிந்த பிறகு பல நாட்களாக சாலை சீரமைக்கப்படவில்லை. இதனால் அந்த வழியாக வாகனங்கள் சென்றபோது புழுதி பறந்தது. எனவே சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு சாலையில் ஜல்லி கற்கள் போடப்பட்டது. ஆனால் தார் சாலை போடப்படவில்லை. ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து பவானி, நாமக்கல் ஆகிய ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் அந்த வழியாக செல்கிறது. இதனால் புழுதி மண்டலமாக காட்சி அளிக்கிறது. சாலையோரமாக உள்ள வீடுகள், கடைகளில் புழுதி படிகிறது. எனவே சாலையை சீரமைக்க தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
சாலை மறியல்
இந்தநிலையில் கடைக்காரர்கள் உள்பட பொதுமக்கள் ஈரோடு பஸ் நிலையம் அருகில் ஈ.வி.கே.சம்பத் சாலையில் திரண்டனர். அவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசாரும், மாநகராட்சி அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.
அப்போது பொதுமக்கள் கூறுகையில், “ஈ.வி.கே.சம்பத் ரோட்டில் வாகனங்கள் செல்லும்போது புழுதி பறக்கிறது. இதனால் சுவாசக்கோளாறு போன்ற பிரச்சினை ஏற்படுகிறது. தார் சாலை போடப்பட வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.
போக்குவரத்து பாதிப்பு
மேலும், கடந்த 10 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. அதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்“, என்றனர்.
அதற்கு அதிகாரிகள், குடிநீர் குழாய்களுக்கு இணைப்பு கொடுக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் நிறைவடைந்ததும் சாலை அமைக்கப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக ஈரோடு பஸ் நிலைய பகுதியில் சுமார் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொதுமக்களின் போராட்டத்தினால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story