மதுரையில் இருந்து இலங்கைக்கு 1,000 டன் அரிசி

மதுரையில் இருந்து இலங்கைக்கு 1,000 டன் அரிசி அனுப்பி வைக்கப்படுகிறது
மதுரை,
மதுரையில் இருந்து இலங்கைக்கு 1,000 டன் அரிசி அனுப்பி வைக்கப்படுகிறது.
பால் பவுடர்
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதனால் அங்கு பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு உதவ முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருகிறார். கடந்த சட்டசபை கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், இலங்கை தமிழர்களுக்கு ரூ.80 கோடி மதிப்பீட்டில் 40 ஆயிரம் டன் அரிசி, ரூ.28 கோடி செலவில் மருந்து பொருட்கள், ரூ.28 கோடி செலவில் 500 டன் பால் பவுடர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தமிழகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்படும் என்று அறிவித்தார்.
அதில் சுமார் 1,000 டன் தரமான சன்ன ரக புழுங்கல் அரிசி மதுரையில் இருந்து அனுப்பி வைக்கப்படுகிறது. அதற்காக சிந்தாமணி, பனையூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள 12 அரிசி ஆலைகளுக்கு தமிழக அரசு ஆர்டர் கொடுத்து உள்ளது.
கலெக்டர் அறிவுரை
இந்த அரிசி, இப்போது பேக்கிங் செய்யும் பணி நடந்து வருகிறது. அரசு நிர்ணயித்துள்ள தரத்தில் அரிசி 10 கிலோ பைகளாக தயார் செய்யப்பட்டு வருகிறது. பின்னர் இந்த அரிசி தூத்துக்குடி துறைமுகத்திற்கு அனுப்பப்பட்டு, பின் அங்கிருந்து இலங்கை கொண்டு செல்லப்படுகிறது. இந்த அரிசி பேக்கிங் செய்யும் பணியினை கலெக்டர் அனிஷ் சேகர் நேற்று நேரடியாக ஆலைகளில் ஆய்வு செய்தார்.
அப்போது அவர் அரிசியின் தரத்தில் எந்த குறைபாடும் இருக்க கூடாது. பேக்கிங் மிக நேர்த்தியாக செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும் கலெக்டர் இந்த அரிசி அனுப்பி வைக்கும் வரை அதன் பணிகளை கண்காணிக்க துணை ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர்கள் கொண்ட குழுவினை அமைத்தார். கலெக்டரின் இந்த ஆய்வின் போது, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் இந்திரவள்ளி உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story






