தூத்துக்குடி காமராஜ் கல்லூரிக்கு ஏ பிளஸ் தரச்சான்று
தூத்துக்குடி காமராஜ் கல்லூரிக்கு ஏ பிளஸ் தரச்சான்று கிடைத்துள்ளது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி காமராஜ் கல்லூரி முதல்வர் நாகராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் துணை வேந்தர் நாகலபள்ளி நாகராஜூ தலைமையில் பேராசிரியர் பிரவின் சக்சேனா, கல்லூரி முதல்வர் தரண்ஜீத் ஜீத் ஆகியோர் அடங்கிய தேசிய தரமதிப்பீட்டு குழு ஆய்வு செய்தது. அப்போது, கல்லூரியில் உள்ள அனைத்து துறைகள், ஆராய்ச்சி மையங்கள், நூலகம், உடற்பயிற்சியகம், மின்னணு சார்ந்த பாடம் புகட்டும் கருவிகள், வேலைவாய்ப்பு மையம், புதிய தொழில் முனைவோர் மையம், வளாக வசதிகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர். அதே போன்று நாட்டு நலப்பணித்திட்டம், தேசிய மாணவர் படை, இளைஞர் நலம், உன்னத் பாரத் அபியான் ஆகியவற்றின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்தனர். கல்லூரி வளாகத்தில் உள்ள மண்புழு உரம் தயாரித்தல், மீன் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, காளான் வளர்ப்பு, தாவரவியல் பூங்கா, பசுமை இல்லம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வு முடிவில் 3.31 மதிப்பெண் பெற்ற காமராஜ் கல்லூரிக்கு தேசிய தரமதிப்பீட்டு குழு ஏ பிளஸ் தரச்சான்றை வழங்கி உள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக பி தரத்தில் இருந்த கல்லூரி வேகமாக ஏ பிளஸ் தரத்துக்கு வளர்ந்து உள்ளது. இது மாணவர்கள், பெற்றோர், முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் நிர்வாகத்தினரின் ஒட்டு மொத்த கூட்டு முயற்சியே காரணம் ஆகும். இந்த தரச்சான்று மூலம் கல்லூரி வளர்ச்சிக்கு ஊக்கமாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார். அப்போது, கல்லூரி செயலாளர் சோமு, பொருளாளர் முத்துசெல்வம், உள்தரமதிப்பீட்டுக்குழு ஒருங்கிணைப்பாளர் பூங்கொடி ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story