ரூ.15 கொடுத்து குடிநீர் வாங்கும் அவலம்


ரூ.15 கொடுத்து குடிநீர் வாங்கும் அவலம்
x
தினத்தந்தி 18 May 2022 6:26 PM IST (Updated: 18 May 2022 6:26 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் ஆயுதப்படை குடியிருப்பு பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் 3 ஆண்டுகளுக்கு மேலாக செயல் படாததால் ரூ.15 விலை கொடுத்து குடிநீர் வாங்கும் அவல நிலைக்கு போலீசார் தள்ளப்பட்டு உள்ளனர்.

ராமநாதபுரம்.
ராமநாதபுரம் ஆயுதப்படை குடியிருப்பு பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் 3 ஆண்டுகளுக்கு மேலாக செயல் படாததால் ரூ.15 விலை கொடுத்து குடிநீர் வாங்கும் அவல நிலைக்கு போலீசார் தள்ளப்பட்டு உள்ளனர்.
வீடு ஒதுக்கீடு
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் அருகில் போலீசாருக்கு ஆயுதப்படை வளாகம் மற்றும் ஆயுதப்படை குடியிருப்பு வளாகம் அமைந்துள்ளது. இங்கு ஆயுதப்படை காவலர்கள், கேணிக்கரை, அனைத்து மகளிர் காவல்நிலையம் உள்ளிட்ட காவல்நிலைய போலீஸ் அதிகாரிகள் முதல் காவலர்கள் வரையிலானவர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 
இங்கு ராட்சத கிணறுகள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப் பட்டு வந்த நிலையில் நீர் வறண்டு விட்டதால் குடிநீர் சப்ளை எப்பேதாவது வருகிறது. இதுதவிர, காவிரி குடிநீர் திட்ட குடிநீரும் பற்றாக்குறை காரணமாக பெரும்பாலான நேரங்களில் வருவதில்லை. 
மழைநீர் சேகரிப்பு
ஆயுதப்படை வளாகத்தில் மழைநீர் சேகரிப்பு என்ற பெயரில் தோண்டிய ராட்சத பள்ளத்தில் நீர் சென்றுவிட்டதால் கிணறுகளின் நீர் ஊற்று வற்றி விட்டது. இந்தநிலையில் ஆயுதப்படை குடியிருப்பு வளாகத்தில் காவலர்களின் குடும்பத்தினருக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நோக்கில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு போலீஸ் உயர் அதிகாரிகள் திறந்து வைத்தனர். 
இந்த நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஒரு குடம் ரூ.5 என்ற மலிவு விலையில் போலீசாரின் குடும்பத்தினருக்கு சப்ளை செய்யப்பட்டு வந்தது. இதில் இருந்து கிடைக்கும் வருவாய் பராமரிப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்தநிலையில் முறையான பராமரிப்பு மற்றும் உயர் அதிகாரி களின் ஒத்துழைப்பின்மை காரணமாக இந்த குடிநீர் சுத்தி கரிப்பு நிலையம் மெல்லமெல்ல அதன் உற்பத்தியை நிறுத்தி கொண்டது.
இதன்காரணமாக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டு விட்டது. தற்போது போலீசாரின் குடும்பத்தினர் தண்ணீர் வண்டிகளில் வரும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை ஒரு குடம் ரூ.15-க்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். 
கோரிக்கை
ஆயுதப்படை வளாகத்தில் செயல்படாமல் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தினை சம்பந்தப்பட்ட ஆயுதப்படை அதிகாரிகள் தங்களின் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுசென்று சரி செய்தாலே குடும்பத்தினருக்கு மீண்டும் சுத்திரிக்கப்பட்ட குடிநீர் மலிவு விலையில் வழங்கலாம். 
ஆனால், அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆயுதப்படை வளாகத்தில் குடிநீருக்காக போலீசாரின் குடும்பத்தினர் தவித்து வருகின்றனர். அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Next Story