குற்றாலம் அருவிகளில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்; சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்


குற்றாலம் அருவிகளில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்; சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்
x
தினத்தந்தி 18 May 2022 6:43 PM IST (Updated: 18 May 2022 6:43 PM IST)
t-max-icont-min-icon

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த சாரல் மழையால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் ெகாட்டுகிறது. இதில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

தென்காசி:
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த சாரல் மழையால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் ெகாட்டுகிறது. இதில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். 

குற்றாலம் சீசன்
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தென்மேற்கு பருவமழை பெய்யத்தொடங்கும் போது, அதாவது ஜூன் மாதத்தில் சீசன் ஆரம்பிக்கும். சில ஆண்டுகளில் மே மாத இறுதியிலேயே சீசன் தொடங்கி உள்ளது. இந்த சீசன் காலங்களில் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் கொட்டும். இந்த சீசனை அனுபவிக்க பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவார்கள். 
கடந்த சில நாட்களாக குற்றாலத்தில் சீசன் நேரத்தில் வீசும் காற்று போன்று குளிர்ந்த காற்று வீசியது. அவ்வப்போது சாரல் மழையும் பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்த சாரல் மழையினால் இங்குள்ள அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. மறுநாளே மழை இல்லாததால் அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்தது.

வெள்ளப்பெருக்கு
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் குற்றாலம் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்தது. நேற்று காலையிலும் சாரல் மழை தொடர்ந்து பெய்தது. இதன் காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் காலை 10 மணிக்கு திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அருவி தண்ணீரில் சிறு, சிறு கற்கள் மற்றும் மரத்துண்டுகள் விழுந்தன.
உடனடியாக அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் சுற்றுலா பயணிகளை வெளியேற்றி குளிக்க தடை விதித்தனர். பின்னர் சிறிது நேரத்தில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் மீண்டும் குளிக்க அனுமதித்தனர். 10.30 மணி அளவில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது, தண்ணீர் பாதுகாப்பு வளைவின் மீது சீறிப்பாய்ந்து கொட்டியது. இதில் குளிப்பது ஆபத்து என்பதால் மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்
இதன்பிறகு மதியம் 2 மணிக்கு வெள்ளப்பெருக்கு குறைந்ததை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் அனுமதி அளித்தனர். அதாவது சுமார் 3½ மணி நேரம் தடைக்கு பின்னர் குளிக்க அனுமதி அளித்ததால் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக மெயின் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். இதேபோல் மற்ற அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. அங்கும் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.
இதே நிலை நீடித்தால் வெகு விரைவில் குற்றாலத்தில் சீசன் களைகட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story