சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்தும் வறண்டு கிடக்கும் ஏரிகள்


சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்தும் வறண்டு கிடக்கும் ஏரிகள்
x
தினத்தந்தி 18 May 2022 8:02 PM IST (Updated: 18 May 2022 9:33 PM IST)
t-max-icont-min-icon

சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்தும் ஏரிகள் வறண்டு கிடக்கின்றன. நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாணாபுரம்

சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்தும் ஏரிகள் வறண்டு கிடக்கின்றன. நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகா பகுதியில் சாத்தனூர் அணை உள்ளது. ஆண்டு தோறும் மார்ச் மாதத்தில் ஏரிகளுக்கும், பாசனத்திற்கும் தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். 

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தண்ணீர் கடந்த 40 நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. இந்த தண்ணீரானது இடதுபுற கால்வாய் வழியாக வாணாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள 40 ஏரிகளுக்கு செல்கிறது. 

இந்த நிலையில் முடியனூர் பகுதியில் இருந்து பல்வேறு ஏரிகளுக்கு தண்ணீர் செல்கிறது. பிரதான கால்வாய் உள்ள இப்பகுதிகளில் பெரும்பாலான ஏரிகளுக்கு தண்ணீர் முழுமையாக செல்லவில்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். 
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- 

 வறண்டு கிடக்கும் ஏரிகள்

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படுவது வழக்கம். பொதுவாக 3 மாதங்களுக்கு மேல் தண்ணீர் வரும் நிலையில் இந்த ஆண்டு அணை பராமரிப்பு பணி நடைபெறுவதால் 2 மாதங்களுக்குள் தண்ணீர் நிறுத்தப்படுகின்ற நிலையில் உள்ளது. இதனால் பெரும்பாலான ஏரிகளுக்கு தண்ணீர் செல்லவில்லை. 

பெரியகல்லப்பாடி, சின்னகல்லப்பாடி, பாவப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏரிகள் முழுவதுமாக தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. ஏரி அருகில் உள்ள கிணற்றுக்கு கூட தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. 

இதேபோல் தச்சம்பட்டு, வெறையூர் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஏரிகளுக்கு பாதியளவு கூட தண்ணீர் ஏரிக்கு வர வில்லை. ஓரிரு நாட்களில் அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்படும் நிலையில் சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு ஏரிக்கு தண்ணீர் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

Next Story