கோத்தகிரி பகுதியில் அவரைக்காய் அறுவடையில் விவசாயிகள் மும்முரம்
கூடுதல் வருவாய் கிடைப்பதால் மகிழ்ச்சி
கோத்தகிரி
கோத்தகிரி பகுதியில் அவரைக்காய் அறுவடையில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் அவரை மற்றும் விதைகள் மூலம் அதிக வருவாய் கிடைப்பதால் மகிழ்ச்சி அடைந்து உள்ளார்கள்.
அவரைக்காய் அறுவடை
கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை சாகுபடிக்கு அடுத்தபடியாக மலைக்காய்கறிகள் விவசாயமே பிரதானமாக உள்ளது. விவசாயிகள் தங்களுக்கு சொந்தமான நிலங்களை பதப்படுத்தி கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், காலிபிளவர், முள்ளங்கி, நூல்கோல், பீன்ஸ், அவரை, பூண்டு உள்ளிட்ட மலைக்காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர்.
இதேபோன்று ஒரு சில விவசாயிகள் ஏற்றுமதி தரம் வாய்ந்த புரூக்கோலி, ஐஸ்பெர்க் உள்ளிட்ட ஆங்கில காய்கறிகளையும் சாகுபடி செய்து, கணிசமான லாபம் ஈட்டி வருகின்றனர். நீலகிரியில் விளையும் அவரை மிகவும் சுவையுள்ளதாக இருப்பதால், இந்த அவரைக்கு எப்பொழுதும் சந்தையில் நல்ல மவுசு இருந்து வருகிறது.
பணிகள் மும்முரம்
பயிர் முற்றாத நிலையில் பீன்ஸ் ஆகவும், நன்கு முற்றிய பயிர்களில் உள்ள விதைகள் அவரைக் கொட்டைகளாக உரித்தும் விற்பனை செய்யப்படுகிறது. அவரைக்கு எப்போதும் நல்ல கொள்முதல் விலை கிடைத்து வருவதால், கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளான கட்டபெட்டு, பனஹட்டி, பில்லிக்கம்பை, கக்குச்சி, மிளிதேன், நெடுகுளா, எரிசிபெட்டா உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது தோட்டங்களில் அதிக அளவில் அவரையைப் பயிரிட்டுள்ளனர்.
அவைத் தற்போது நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. எனவே நன்கு முற்றிய அவரையை தற்போது அறுவடை செய்து விற்பனைக்காக அனுப்பும் பணியை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
கூடுதல் வருவாய் கிடைக்கும்
இந்த அவரையின் மேல்தோலை உரிக்காத சோடகை என்று அழைக்கபடும் அவரை கிலோவுக்கு ரூ.160-க்கும், தோல் அகற்றப்பட்ட அவரை விதைகள் கிலோவுக்கு ரூ.200 முதல் ரூ.240-க்கும் கடைகளில் விற்பனை செய்யபட்டு வருகிறது. மேலும் ஒரு சில விவசாயிகள் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்பதால், இந்த விதைகளை நன்கு உலர்த்தி அந்த விதைகளை விற்பனை செய்து வருகின்றனர்.
மேலும் நீலகிரி அவரைக்கு நிலையான கொள்முதல் விலை கிடைத்து வருவதால், அதைப் பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story