குமுளூர் ஜல்லிக்கட்டில் 565 காளைகள் சீறிப்பாய்ந்தன; 21 பேர் காயம்


குமுளூர் ஜல்லிக்கட்டில் 565 காளைகள் சீறிப்பாய்ந்தன; 21 பேர் காயம்
x
தினத்தந்தி 18 May 2022 8:07 PM IST (Updated: 18 May 2022 8:07 PM IST)
t-max-icont-min-icon

புள்ளம்பாடி அருகே குமுளூரில் நடந்த ஜல்லிக்கட்டில் 565 காளைகள் சீறிப்பாய்ந்தன. இதில் காளைகள் முட்டியதில் 21 பேர் காயம் அடைந்தனர்.

கல்லக்குடி, மே.19-
புள்ளம்பாடி அருகே குமுளூரில் நடந்த ஜல்லிக்கட்டில் 565 காளைகள் சீறிப்பாய்ந்தன. இதில் காளைகள் முட்டியதில் 21 பேர் காயம் அடைந்தனர்.
ஜல்லிக்கட்டு
புள்ளம்பாடி அருகே குமுளூர் கிராமத்தில் ஆயிரவள்ளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர், மதுரை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்துவரப்பட்ட 565 காளைகள் பங்கேற்றன.
இதேபோல் 303 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். காலை 8.10 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு மதியம் 2 மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்றது.
21 பேர் காயம்
இதில் சில காளைகள் வீரர்களிடம் பிடிபட்டன. சில காளைகள் வீரர்களிடம் பிடிபடாமல் அவர்களை மிரட்டியபடி சென்றது. சில காளைகள் தன்னை பிடிக்க வந்த வீரர்களை முட்டி தள்ளியது. இதில் சீறிப்பாய்ந்து வந்த காளைகள் முட்டியதில் 21 வீரர்கள் காயமடைந்தனர். காயம் அடைந்தவர்களுக்கு அங்கு தயாராக இருந்த மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். படுகாயம் அடைந்த ஒருவர் மட்டும் லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் ரொக்கப்பணம், டி.வி.க்கள், குக்கர்கள், மின்விசிறி, அண்டா என ரூ.6 லட்சம் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட்டன.  
சிறந்த காளை
சிறந்த ஜல்லிக்கட்டு காளைக்கான பரிசை மதுரை ஆண்டிச்சாமி கோவில் காளை தட்டி சென்றது. சிறந்த மாடுபிடி வீரராக சாத்தமங்கலம் நவீன் தேர்வு செய்யப்பட்டார். இதற்கான ஏற்பாடுகளை  ஜல்லிக்கட்டு பேரவையை சேர்ந்த விஸ்வநாதன் தலைமையில் ஒருங்கிணைப்பு குழுவினர் செய்திருந்தனர். ஜல்லிக்கட்டில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

Next Story