கோடை விழாவையொட்டி ஊட்டி படகு இல்லத்தில் மாணவிகள் நடனம் ஆடி அசத்தல்

கோடை விழாவையொட்டி ஊட்டி படகு இல்லத்தில் மாணவிகள் நடனம் ஆடி அசத்தினர். இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
ஊட்டி
கோடை விழாவையொட்டி ஊட்டி படகு இல்லத்தில் மாணவிகள் நடனம் ஆடி அசத்தினர். இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
கோடை விழா
நீலகிரியில் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் பிற துறைகள் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் கோடை விழா நடத்தப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்திற்கு வருகை புரியும் சுற்றுலா பயணிகளுக்கு தமிழ்நாட்டின் கலை மற்றும் கலாசாரத்தை வெளிப்படுத்தும் வகையிலும், அவர்களை மகிழ்விக்கும் வகையிலும் இந்த விழா இருக்கும். இந்த ஆண்டு கோடை விழா வருகிற 7-ந் தேதி தொடங்கியது. அதன்படி வருகிற 31-ந் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இதேபோல் 7 மற்றும் 8-ந் தேதி ஆகிய 2 நாட்கள் கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி நடந்தது. இதைத்தொடர்ந்து 13, 14 மற்றும் 15-ந் தேதி ஆகிய தேதிகளில் கூடலூரில் கோடை விழாவுடன் வாசனை திரவிய கண்காட்சியும், 14 மற்றும் 15 ஆகிய நாட்களில் ஊட்டி ரோஜா பூங்காவில் ரோஜா மலர் கண்காட்சியும் நடந்தது.
நடனமாடி அசத்தல்
இந்த நிலையில் ஊட்டியில் கோடை விழாவையொட்டி பரத நாட்டியம், கிராமிய கலைகள், இன்னிசை நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் 24-ந் தேதி வரை பழங்குடியினர் கலாசார மையத்திலும், 25-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை தாவரவியல் பூங்காவிலும், 31-ந் தேதி வரை ஊட்டி படகு இல்லத்திலும் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. அதன்படி நேற்று மேற்கண்ட இடங்களில் கலை நிகழ்ச்சிகள் தொடங்கின. ஊட்டி படகு இல்லத்தில் காலை 11 மணி அளவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவ -மாணவிகள் கலந்துகொண்டு பரதநாட்டியம் உள்பட பல்வேறு நடனமாடி பார்வையாளர்களை கவர்ந்தனர். இதை அங்கு வந்த சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அப்போது லேசாக மழை பெய்ய தொடங்கியது. ஆனாலும் குடை பிடித்தபடி சுற்றுலா பயணிகள், மாணவிகள் நடனத்தைத் தொடர்ந்து பார்த்து ரசித்தனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சுற்றுலா அலுவலர் உமா சங்கர் செய்து இருந்தார்.
Related Tags :
Next Story






