தமிழக அரசின் ஓராண்டு சாதனை மலரை வெளியிட்டு 634 பேருக்கு ரூ.3.41 கோடியில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் வழங்கினர்
தமிழக அரசின் ஓராண்டு சாதனை மலரை வெளியிட்டு 634 பேருக்கு ரூ.3.41 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் வழங்கினர்.
விழுப்புரம்,
சாதனை மலர் வெளியீடு
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றுள்ளதையொட்டி ஓயா உழைப்பின் ஓராண்டு- கடைக்கோடி தமிழர்களின் கனவுகளை தாங்கி என்ற தலைப்பில் அரசின் சாதனை திட்டங்களை உள்ளடக்கிய ஓராண்டு சாதனை மலர் வெளியிடும் நிகழ்ச்சி நேற்று காலை விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். துரை.ரவிக்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, மணிக்கண்ணன், சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் அனைவரையும் வரவேற்றார்.
நலத்திட்ட உதவிகள்
நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் கலந்துகொண்டு, தமிழக அரசின் ஓராண்டு சாதனை மலரினை வெளியிட்டனர்.
அதனை தொடர்ந்து வருவாய்த்துறை, சமூக பாதுகாப்புத்துறை, வேளாண்மைத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 634 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 41 லட்சத்து 10 ஆயிரத்து 215 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் ஆகியோர் வழங்கினர்.
கலந்துகொண்டவர்கள்
நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கர், மகளிர் திட்ட அலுவலர் காஞ்சனா, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் ஷீலாதேவி சேரன், விழுப்புரம் நகரமன்ற தலைவர் சக்கரை தமிழ்செல்வி, துணைத்தலைவர் சித்திக்அலி உள்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story