தனியார் நிறுவன அதிகாரியிடம் ரூ.1¼ கோடி மோசடி
ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என கூறி தனியார் நிறுவன அதிகாரியிடம் ரூ.1¼ கோடியை மோசடி செய்த சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக தெலுங்கானா தம்பதியை போலீசார் தேடி வருகிறார்கள்.
மைசூரு
தனியார் நிறுவன மேலாளர்
மைசூரு மாவட்டம் டவுன் போகாதி பகுதியை சேர்ந்தவர் சீனிவாஸ் (வயது 52). இவரது மனைவி நாகரத்னா(44). சீனிவாஸ் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார்.
அப்போது அவருக்கு சிகந்தராபாத் பகுதியை சோ்ந்த சுனில்கனத்தே மற்றும் அவரது மனைவி கங்கா ஆகியோர் அறிமுகம் ஆனார்கள். இதையடுத்து தம்பதி மைசூருவில் உள்ள சீனிவாஸ் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளனர்.
இந்தநிலையில் சுனில்கனத்தே, அவரது மனைவி நாங்கள் ஐதராபாத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட இருக்கிறோம் என்றும், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும் சீனிவாசிடம் கூறியுள்ளார்.
அதில் நீங்கள் பணம் முதலீடு செய்தால் கிடைக்கும் லாபத்தில் ஒரு பங்கு உங்களுக்கு தருவதாக கூறியுள்ளார்.
வங்கி கணக்கில்...
இதனை நம்பிய சீனிவாஸ், கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை பல்வேறு தவணைகளாக ரூ.1¼ கோடி வரை சுனில்கத்தே, கங்கா வங்கி கணக்கிற்கு செலுத்தியுள்ளார்.
இந்தநிலையில் சீனிவாஸ், அனுப்பிய பணத்திற்கு லாபம் கேட்டுள்ளார். ஆனால் சுனில் கனத்தே அதற்கு முறையாக பதில் அளிக்கவில்லை. மேலும் பணத்தை திரும்ப கேட்டு உள்ளார். ஆனால் சீனிவாசிற்கு அவர் பணத்தை திரும்ப கொடுக்கவில்லை.
இதையடுத்து சீனிவாஸ் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். இதுகுறித்து அவர் சரஸ்வதிபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சுனில்கனத்தே அவரது மனைவி கங்கா ஆகிய 2 பேைர போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.