10 'குக்கி' இன எம்.எல்.ஏ.க்களும் புறக்கணிப்பு; மணிப்பூர் சட்டசபையில் காங்கிரஸ் அமளி


10 குக்கி இன எம்.எல்.ஏ.க்களும் புறக்கணிப்பு; மணிப்பூர் சட்டசபையில் காங்கிரஸ் அமளி
x

மணிப்பூர் சட்டசபை கூட்டத்தொடர் நாட்களை நீட்டிக்கக்கோரி, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர். அதனால், தொடங்கிய ஒரு மணி நேரத்துக்குள் கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

ஒரு நாள் கூட்டம்

மணிப்பூர் மாநிலத்தில், கடந்த மே 3-ந் தேதி, மெய்தி இன மக்களுக்கும், 'குக்கி' பழங்குடியின மக்களுக்கும் இடையே கலவரம் வெடித்தது. 160 பேர் பலியானார்கள்.

மணிப்பூர் சட்டசபை, கடைசியாக கடந்த மார்ச் 3-ந் தேதி கூடியது. 6 மாதங்களுக்கு ஒருதடவை சட்டசபை கூட்டப்பட வேண்டும் என்பது விதிமுறை. எனவே, கடந்த 21-ந் தேதி சட்டசபையை கூட்ட முடிவு செய்யப்பட்டது. ஆனால், கவர்னர் மாளிகையிடம் இருந்து ஒப்புதல் கிடைக்காததால், 29-ந் தேதிக்கு மாற்றப்பட்டது.

அதன்படி, நேற்று மணிப்பூர் சட்டசபை கூடியது. இது ஒரு நாள் கூட்டத்தொடர் ஆகும்.

இரங்கல் தீர்மானம்

சபை தொடங்கியவுடன், மணிப்பூர் கலவரத்தில் பலியானோருக்கு உறுப்பினர்கள் எழுந்து நின்று 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், முதல்-மந்திரி பிரேன்சிங் இரங்கல் தீர்மானம் வாசித்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மணிப்பூர் கலவரத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்கிறோம். காயங்களை ஆற்றி, ஒற்றுமையை வளர்க்க அனைவரும் ஒன்று திரள்வோம். சாதி, மத வேறுபாடின்றி அனைத்து மக்களிடையே நல்லிணக்கத்தை உருவாக்க சட்டசபை உறுதி மேற்கொள்கிறது. மக்கள் வன்முறையை கைவிட்டு, அமைதியை கடைபிடிக்க வேண்டும். பிளவு சக்திகளை புறக்கணிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஒத்திவைப்பு

அதைத்தொடர்ந்து, முன்னாள் முதல்-மந்திரி ஒக்ராம் இபோபிசிங் தலைமையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். கலவர பாதிப்பு குறித்து விவாதிக்க ஒரு நாள் கூட்டம் போதாது என்றும், 5 நாள் கூட்டத்தொடராக நீட்டிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோஷமிட்டனர். இந்த அமளி காரணமாக, கூட்டத்தொடரை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக சபாநாயகர் சத்யபிரதா சிங் அறிவித்தார். இதனால், தொடங்கிய ஒரு மணி நேரத்துக்குள் கூட்டம் முடிவடைந்தது.

'குக்கி' சமுதாயத்தை சேர்ந்த மொத்தம் 10 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். 10 பேரும் சபைக்கு வரவில்லை. அவர்களில் 7 பேர் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் ஆவர். பெரும்பாலான 'குக்கி' எம்.எல்.ஏ.க்கள், விடுமுறை எடுத்துக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.

காங்கிரஸ் குற்றச்சாட்டு

இதற்கிடையே, மணிப்பூர் சட்டசபை கூட்டத்தை விமர்சித்து, காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், தனது சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

மணிப்பூர் சட்டசபை கூட்டம் ஒரு மணி நேரத்துக்கு குறைவாக நடந்துள்ளது. இது ஒரு கேலிக்கூத்து. இவ்வளவு பெரும்பான்மை இருந்தும், மேலும் சில நாட்களுக்கு கூட்டத்தொடரை நடத்த பா.ஜனதாவுக்க மனம் இல்லை. அப்படி நடத்தினால், பா.ஜனதாவில் நிலவும் கருத்து வேறுபாடு அம்பலத்துக்கு வந்து விடும்.

'குக்கி' எம்.எல்.ஏ.க்கள் புறக்கணித்திருப்பது, மாநிலம் பிளவுபட்டதை காட்டுகிறது. முதல்-மந்திரி பிரேன்சிங், அமைதியை கொண்டுவர பொருத்தமற்றவர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story