2025-ம் ஆண்டுக்குள் கால்நடைகளின் நோய்க்கு 100% தடுப்பூசி; பிரதமர் மோடி


2025-ம் ஆண்டுக்குள் கால்நடைகளின் நோய்க்கு 100% தடுப்பூசி; பிரதமர் மோடி
x

இந்தியாவில் 2025-ம் ஆண்டுக்குள் கால்நடைகளின் கால் மற்றும் வாய் நோய்க்கு 100 சதவீத தடுப்பூசி போடப்படும் என பிரதமர் மோடி இன்று பேசியுள்ளார்.



கிரேட்டர் நொய்டா,



உலக அளவில் விலங்குகளுக்கு தடுப்பூசி போடப்பட வேண்டும் என இந்தியா வலியுறுத்தி வரும் சூழலில் உலக பால்பண்ணை மாநாட்டில் கலந்து கொண்டு பிரதமர் மோடி இன்று பேசினார்.

அவர் பேசும்போது, இந்தியாவின் பல மாநிலங்களில் கடந்த காலத்தில் கால்நடைகள் தோல் நோயால் பெருமளவில் உயிரிழந்து உள்ளன. அதனை மாநில அரசுகளுடன் சேர்ந்து கட்டுப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.

இந்த தோல் நோய்க்கு எதிராக நம் விஞ்ஞானிகள் உள்நாட்டிலேயே தயாரான தடுப்பூசியை உற்பத்தி செய்துள்ளனர். அதன் பரிசோதனைகளும் அதிகரிக்கப்பட்டு வருகின்றன என கூறியுள்ளார்.

நாட்டில் பசு, எருது, காளைகள் மற்றும் கன்றுகள் என கால்நடைகளுக்கு தோல் நோய்கள் சமீப காலங்களாக வேகமுடன் பரவி வருகின்றன. இதற்கு மருந்துகள் எதுவும் கிடையாது. அதனால், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இந்த தோல் நோய்க்கு இதுவரை 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. 7,300 கால்நடைகள் உயிரிழந்து உள்ளன என கடந்த ஆகஸ்டு இறுதியில் தெரிவிக்கப்பட்டது. தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் போடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.

அதிக தொற்றும் தன்மை கொண்ட இந்த வியாதியானது, ரத்தம் குடிக்கும் பூச்சிகளால் பரப்பப்படுகிறது. இதனால், காய்ச்சல், தோலில் பாதிப்பு உள்ளிட்டவை ஏற்பட்டு கால்நடைகளின் உயிரிழப்பும் ஏற்படுகிறது.

இதுபற்றி பிரதமர் கூறும்போது, உலக அளவில் விலங்குகளுக்கு தடுப்பூசி போடப்பட வேண்டும் என இந்தியா வலியுறுத்தி வருகிறது. இந்தியாவில் 2025-ம் ஆண்டுக்குள் கால்நடைகளின் கால் மற்றும் வாய் நோய் மற்றும் புருசெல்லாசிஸ் நோய்க்கு 100 சதவீத தடுப்பூசி போடப்படும்.

இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் இந்த வியாதியில் இருந்து முற்றிலும் விடுபடுவதற்கான இலக்கை கொண்டு நாங்கள் செயல்பட்டு வருகிறோம் என பிரதமர் மோடி இன்று பேசியுள்ளார்.


Next Story