ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம்; அரசு அதிகாரிகள் 2 பேர் கைது
ஓய்வூதிய தொகையை வழங்க ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரிகள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மைசூரு;
ரூ.10 ஆயிரம் லஞ்சம்
மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டையில், அரசுப்பள்ளியில் சித்திராஜ் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த மே மாதம் 31-ந்தேதி சித்திராஜ் ஓய்வு பெற்றார். இதையடுத்து அவர், ஓய்வூதிய தொகை பெற எச்.டி.கோட்டை கல்வித்துறை அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார். அப்போது அவரிடம், கல்வித்துறை அதிகாரிகளான சந்திராகாந்த், சங்கர் என்பவர்கள் ஓய்வூதிய தொகை வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் தரும்படி கேட்டுள்ளனர்.
இதுபற்றி சித்திராஜ், ஊழல் தடுப்பு படைபோலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், சித்திராஜிடம் ரசாயன பொடி தடவிய ரூ.10 ஆயிரத்தை கொடுத்து அதனை கொடுக்கும்படி சில அறிவுரைகள் வழங்கி அனுப்பி வைத்தனர்.
கைது
அதன்படி சித்திராஜூம், 2 பேரையும் சந்தித்து ரூ.10 ஆயிரத்தை லஞ்சமாக கொடுத்தார். அதனை அவர்களும் பெற்றுக்கொண்டனர். இதனை மறைவாக நின்று கவனித்த ஊழல் தடுப்பு படைபோலீசார் 2 பேரையும் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து ரூ.10 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். கைதான அரசு அதிகாரிகள் 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இவர்களுடன் பெங்களூருவில் பொதுக்கல்வித்துறை அலுவலகத்தில் பணியாற்றும் ரவிக்குமாருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.