நாட்டில் 9 மாதங்களில் 11,300 கிலோ போதை பொருள் பறிமுதல்; அதிர்ச்சி தகவல்
நாட்டில் 9 மாதங்களில் 11,300 கிலோ போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்து உள்ளது.
மும்பை,
மும்பை போதை பொருள் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டு உள்ள செய்தியில், நாட்டில் நடப்பு ஆண்டின் 9 மாதங்களில் 11,300 கிலோ போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
போதை பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த 58 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த ஆண்டில் போதை பொருள் கடத்தல் உள்ளிட்ட அவற்றுடன் தொடர்புடைய மொத்தம் 46 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
கொரோனா பாதிப்புக்கு பின்னர், பொருளாதார மீட்சிக்கான நடவடிக்கையில் மக்கள் பாடுபட்டு வரும் சூழலில் இதுபோன்ற சட்டவிரோத செயல்களின் வளர்ச்சியும், பயன்பாடும் அபரிமிதம் அடைந்து உள்ளது.
கடந்த ஆண்டில் 1,780 கிலோ போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டன. 240 போதை பொருள் கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டனர். 119 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த எண்ணிக்கை அதிகம் ஆகும் என அந்த வாரியத்தின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இதன்படி, மராட்டியம், டெல்லி, குஜராத், பஞ்சாப் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் இருந்து கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இவற்றில் கோக்கைன், மெபிடிரோன், கஞ்சா மற்றும் எல்.எஸ்.டி. வகை போதை பொருட்கள் அதிக அளவில் கைப்பற்றப்பட்டு உள்ளன. எனினும், இவற்றின் சர்வதேச சந்தை மதிப்பு விவரங்கள் எதனையும் போதை பொருள் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிடவில்லை.