ம.பி: பாலியல் சீண்டலை தடுக்க முயன்ற பெண்ணிற்கு நடந்த கொடுமை... முகத்தில் 118 தையல்கள்..!
இந்த சம்பவம் அறிந்த அம்மாநில முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான், அப்பெண்ணை நேரில் சந்தித்ததுடன், துணிச்சலை பாராட்டி ரூ.1 லட்சம் அளித்தார்.
போபால்,
மத்தியப் பிரதேச மாநிலம் டிடி நகர் ரோஷன்புராவில் அமைந்துள்ள ஸ்ரீ பேலஸ் ஹோட்டலுக்கு நேற்று முன் தினம் பெண் ஒருவர் தனது கணவருடன் சென்றுள்ளார்.
அப்போது பைக்கை பார்க்கிங் செய்வது தொடர்பாக அப்பெண்ணிற்கும், மூன்று பேர் கொண்ட கும்பலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த கும்பல், பெண்ணை ஆபாசமான வார்த்தைகளால் புண்படும்படி பேசியதுடன் கிண்டலடித்து விசில் அடித்துள்ளனர்.
இதனால் கோபமடைந்த அப்பெண், துணிச்சலுடன் மூன்று பேரில் ஒருவரை கன்னத்தில் அறைந்துள்ளார். இதையடுத்து தம்பதியினர் ஹோட்டலை விட்டு வெளியே வந்தபோது அந்த கும்பல், பயங்கர கோபத்துடன் பேப்பரை வெட்டும் கத்தியை கொண்டு பெண்ணின் முகத்தில் சாரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதனால் படுகாயமடைந்த பெண்ணை அவரது கணவர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். தீவிர சிகிச்சை அளித்ததுடன், பாதிக்கப்பட்ட பெண்ணின் முகத்தில் 118 தையல்களை போட்டுள்ளனர். தொடர்ந்து அப்பெண் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக ஹோட்டலில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், இரண்டு குற்றவாளிகளை கைது செய்துள்ளதுடன், மூன்றாவது நபரை பிடிக்க தேடுதல் வேட்டை நடத்தி வருவதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் அறிந்த அம்மாநில முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான், இன்று காலை தம்பதியரை நேரில் சந்தித்து மருத்துவ சிகிச்சைக்கு முழு உதவி செய்வதாக உறுதியளித்தார்.
மேலும், அந்தப் பெண்ணின் துணிச்சலைப் பாராட்டி அவருக்கு ரூ. 1 லட்சத்தை வழங்கினார். அப்பெண் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தார் என்று கூறிய முதல் மந்திரி, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்," என்றும் அவர் கூறினார்.